தமிழ்நாட்டின் 32மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட மிக குறைவாக பெய்துள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டின் தென்மேற்கு பருவமழை பற்றிய புள்ளி விவரங்களை இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், தென்னிந்தியாவில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாத மற்றும் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் மொத்தம் 125 மாவட்டங்களில் 54 மாவட்டங்களில் பற்றாக்குறையாகவும், 2 மாவட்டங்களில் மிக அதிகபற்றாக்குறையாகவும் தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. அதாவது 40 சதவிகித மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறையாகவே பெய்துள்ளது.
தமிழ்நாடு
அதிகம் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 32 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. ஒரு மாவட்டத்தில் மிக அதிகமாக பற்றாக்குறையாக பெய்துள்ளது.
கேரளா
தென்மேற்கு பருவமழையால் நிலைகுலைந்துள்ள கேரளாவில், 10 மாவட்டங்களில் அதிக மழையும், 2 மாவட்டங்களில் மிகஅதிக மழையும் பெய்துள்ளது.
புதுச்சேரி
புதுச்சேரியில் மொத்தம் உள்ள 4 மாவட்டங்களிலும் பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது.
கர்நாடகா
கர்நாடகாவில், மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில், 14 மாவட்டங்களில் பற்றாக்குறையாகவும், 2 மாவட்டங்களில் மிக அதிக பற்றாக்குறையாகவும் பருவமழை பெய்துள்ளது.
ஆந்திரா
ஆந்திர மாநிலத்தில் ராயலசீமா பகுதியில் உள்ள 4 மாவட்டங்களிலும், இதர பகுதியில் உள்ள 2 மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது.
தெலங்கானா
தெலங்கானாவில், மொத்தம் உள்ள 31 மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் மிக அதிக பற்றாக்குறையாகவும், லட்சத்தீவில் பற்றாக்குறையாகவும் பருவமழை பெய்துள்ளது.
அணைகளின் நிலவரம்
நாடுதழுவிய அளவில், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், மழைப்பொழிவு 27 சதவிகிதம் பற்றாக்குறையாக பெய்துள்ளது. நாட்டில் உள்ள 91 பெரிய அணைகளின் மொத்த கொள்ளளவில் 63 சதவிகித நீர்மட்டம் உள்ளது. தென்னிந்தியாவில், 31 அணைகளில் 76 சதவிகித நீர்மட்டம் உள்ளது.
இவ்வாறு இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
