திருவனந்தபுரம்:
கேரளாவில் கால்கள் மூலம் கார் ஓட்டும் பெண்ணுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படவுள்ளது.
கேரளா இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜிலுமோல் மரிய தாமஸ் (வயது 26). மாற்றுத்திறனாளியான இவருக்கு கைகள் கிடையாது. இவர் தனது கால்கள் மூலம் கார் ஓட்டும் பயிற்சியை தீவிரமாக மேற்கொண்டார். இறுதியில் இதில் வெற்றி பெற்றார். மற்றவர்களை போல் இயல்பாக கார் ஓட்டினார். இதையடுத்து இவரது நண்பர்கள் ஜிலுமோல் மரிய தாமஸூக்கு கார் வாங்கி கொடுத்தனர்.
3 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டுனர் உரிமம் கேட்டு இடுக்கி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தார். மோட்டார் வாகன சட்டப்படி கால் மூலம் வாகனம் ஓட்டுவது குற்றம் என்று கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர் கேரளா உயர்நீதிமன்றத்தில் கார் ஓட்டுனர் வழங்க உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அவருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கும்படி போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
சமீபத்தில் அவர் வாகன சோதனை ஓட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதையடுத்து ஜிலுமோல் மரிய தாமசுக்கு அடுத்த வாரம் ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து ஜிலுமோல் மரிய தாமஸ் கூறுகையில், ''இந்தியாவிலேயே கால்கள் மூலம் கார் ஓட்டி ஒட்டுனர் உரிமம் பெறும் முதல் நபர் நான் தான். தன்னம்பிக்கை, விடாமுயற்சியை இழக்காதது தான் எனது வெற்றிக்கு காரணம்'' என்றார்.
