கடந்த மார்ச் 31ஆம் தேதி கணக்கீட்டின்படி பிரதமர் நரேந்திர மோடியின் மொத்த சொத்து மதிப்பு 2.28 கோடியாக உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய சொத்து மதிப்பு குறித்து பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த மார்ச் 31ஆம் தேதி மதிப்பின்படி, பிரதமர் மோடியின் மொத்த சொத்து மதிப்பு 2.28 கோடியாக உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோடியின் கையிருப்பில் 48,944 ரூபாய் இருப்பதாகவும், இது கடந்த ஆண்டு இருந்த 1,50,000 ரூபாயை விட 67 சதவிகிதம் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அசையும் சொத்து 1,28,50,498 ரூபாயாகும். அசையா சொத்தாக குஜராத் காந்தி நகரில் 1 கோடி மதிப்புள்ள வீடு உள்ளது. 3531.45 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டை, கடந்த 2002ஆம் ஆண்டு 1லட்சம் ரூபாய்க்கு மோடி வாங்கியுள்ளார்.
காந்தி நகரிலுள்ள என்.எஸ்.சி.எச் ஸ்டேட் பேங்க் கிளையில், மோடி பெயரில் 11 லட்சத்து 29 ஆயிரத்து 690 ரூபாய் இருப்புத் தொகையாக வைக்கப்பட்டுள்ளது. இதே வங்கியில் 1,07,96,288 ரூபாயை நிரந்தர வைப்புத் தொகையாக வைத்துள்ளார். மோடியிடம் சொந்தமாக கார், மோட்டார் பைக் என எதுவும் இல்லை. வங்கிகளிலிருந்து கடன் ஏதும் பெறவில்லை.
பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, தங்கம் எதையும் மோடி வாங்கவில்லை. அவரிடம் 45கிராம் எடை கொண்ட 4 தங்க மோதிரங்கள் உள்ளன. இதன் மதிப்பு 1,38,060 ரூபாயாக உள்ளது. இவை தவிர 20,000 ரூபாய் வரிசேமிப்பு பத்திரங்கள் உள்ளன. 5,18,235 ரூபாய்க்கு தேசிய சேமிப்பு சான்றிதழும், 1,59,281 ரூபாய்க்கு எல்.ஐ.சி. பாலிசியும் உள்ளது. மோடியின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 2 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது ரூ.20 லட்சம் அதிகரித்துள்ளது.
இதுபோலவே நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது கையிருப்பாக 10 லட்சம் ரூபாய் வைத்திருப்பதாகவும், ஹச்டிஎப்சி வங்கியில் 1.58 கோடி ரூபாய் இருப்புத் தொகையாக வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
