பீகாரில் வம்பு சண்டைக்கு வந்த கும்பலை தடுத்த 34 பள்ளி கூட மாணவிகள் மீது தாக்குதல்
பாட்னா,
பீகாரின் சவுபால் மாவட்டத்தில் திரிவேணிகஞ்ச் பகுதியில் கஸ்தூரிபாய் பள்ளி கூடம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு படித்து வந்த மாணவிகளிடம் அங்குள்ள இளைஞர்கள் சிலர் கும்பலாக வந்து வம்பு சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த இளைஞர்களை சில மாணவிகள் பிடித்து வைத்துள்ளனர். பின்னர் அவர்களிடம் பள்ளி கூடத்தில் இருந்து வெளியேறும்படி கேட்டு கொண்டனர்.
எனினும், அவர்கள் மாணவிகளிடம் கடுமையாக நடந்து கொண்டனர். இதனால் மாணவிகள் தற்காப்புக்காக அவர்களை அடித்து உள்ளனர்.
அதன்பின் அங்கிருந்து சென்ற அவர்கள் மீண்டும் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து கொண்டு பள்ளி கூடத்திற்குள் கும்பலாக நுழைந்தனர்.
அவர்களை வெளியே நிற்கும்படி ஆசிரியர்கள் கூறியுள்ளனர். ஆனால் அந்த கும்பல் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை அடித்து தாக்கி உள்ளது.
இந்த சம்பவத்தில் 34 மாணவிகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
