பொய்யான விபத்து இழப்பீடுகளைக் கணக்கு காட்டி 50 கோடி ஊழல் புரிந்ததாக ரயில்வே இழப்பீடு தீர்ப்பாயத்தின் நீதிபதி ஆர்கே.மிட்டால் இடை நீக்கம் செய்யப்பட உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அனுமதி அளித்துள்ளார்.
பதவியிலிருக்கின்ற இழப்பீடு தீர்ப்பாயத்தின் நீதிபதி என்ற முறையில் ஊழல் புரிந்த வழக்கில் அவர் இடைநீக்கம் செய்யப்படுவது நாட்டிலேயே முதன் முறையாகும்.
இந்த ஊழல் வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி யூயூ.லலித்தால் விசாரிக்கப்பட்டது. விசாரணையில்,ரயில் விபத்துகளில் இழப்பீடுக்காக பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக ஆஜராகும் குறிப்பிட்ட சில வழக்கறிஞர்களுடன், நீதிபதி மிட்டால் கூட்டணி அமைத்துக்கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் என்பவர்களாக பொய்யான நபர்களைக் காட்டி பல முறை இழப்பீடு பெற்றுள்ளது கண்டறியப்பட்டது. இந்த இழப்பீடானது ஒரே விபத்துக்கு பல முறை அதே நபர்களால் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு 50 கோடி ரூபாய் வரை இழப்பீடு பெறப்பட்டுள்ளது எனத் தெரிய வந்துள்ளது.
தீர்ப்பாய நீதிபதி மி்ட்டல் ஊழல் புரிந்துள்ளது தெரிய வந்ததும், ரயில்வே இழப்பீடு தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி கே.கண்ணன் மிட்டாலை இடைநீக்கம் செய்யக் கோரி ரயில்வே அமைப்புக்கு கடிதம் எழுதினார். இதற்கிடையே மிட்டால் ராஞ்சியின் ரயில்வே இழப்பீடு தீர்ப்பாயத்திலிருந்து திருவனந்தபுரம் தீர்ப்பாயத்தின் அமர்வுக்கு மாற்றப்பட்டார்.
நீதிபதி மிட்டாலை இடைநீக்கம் செய்ய ரயில்வேத்துறை சட்டரீதியான ஆலோசனை செய்தது பதவியிலிருக்கும் ஒரு நீதிபதியை இடைநீக்கம் செய்ய வேண்டுமென்றால் அதற்கான ஒப்புதலை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடமிருந்து பெற வேண்டும் என்ற சட்டஆலோசனை பெறப்பட்டது. இந்த ஆலோசனையின்படி ,மிட்டால் குறித்த கோப்பானது தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்தே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மிட்டாலை இடைநீக்கம் செய்ய அனுமதி அளித்துள்ளார்.
