ஈரோடு: அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ‘ஷூ’ வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது’’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோட்டில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நவம்பர் மாதத்துக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்படும். 9 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, இன்டர்நெட் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு சி.ஏ. எனப்படும் பட்டய கணக்காளர் படிப்புக்கு நவம்பருக்குள் விருப்பமுள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் படிக்கும் மாணவர்கள் 12ம் வகுப்பு முடித்த உடனேயே தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு உருவாக்கப்படும். அதற்கான அட்டவணைகள், புத்தகங்கள் வழங்குவதற்கும்,
பயிற்சிகளை வழங்க 500 சிறந்த ஆடிட்டர்கள் மூலம் இலவசமாக பயிற்சி அளிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். ஜி.எஸ்.டி.யில் அனைத்து வியாபாரிகளும் கணக்கு காட்ட வேண்டும் என்கிற நிலை உள்ளது. நாட்டில் 130 கோடி மக்கள் தொகையில், 2 லட்சத்து 85 ஆயிரம் பேர் மட்டுமே ஆடிட்டர்களாக உள்ளனர். அதனால் தமிழகத்தில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் பயிற்சி அளிப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. இதன்மூலமாக இந்தியாவுக்கே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழும். சமூக நலத்துறையும், பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து, நடுநிலைப்பள்ளிகளின் வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களை ஒருங்கிணைத்து 4 வயதுக்கு மேல் உள்ள மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்போது எல்.கே.ஜி., யு.கே.ஜி .பயிற்சி அளிப்பதற்கு அரசு பரிசீலித்து வருகிறது.
இத்திட்டம் முதல்வர் ஒப்புதல் பெற்றவுடன் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார். முதல்வரிடம் ஒப்புதல் பெற்ற உடன் நடவடிக்கை: ஈரோட்டில் அரசு உதவி பெறும் கலைமகள் தொடக்கப்பள்ளியில், 3 கூடுதல் வகுப்பறை கட்டப்பட்டது. இந்த வகுப்பறை கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று பேசுகையில், ``1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையும் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை மாற்றப்பட்டு உள்ளன. இதில் 4 செட் சீருடை இலவசமாக வழங்கப்படும். இதேபோல் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் செருப்புக்கு பதிலாக ‘ஷூ’ வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரிடம் ஒப்புதல் பெற்ற உடன் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
