ஹைதராபாத் டெஸ்ட்டில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
ஹைதராபாத்தில் இந்தியா-மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளான இன்று (அக்டோபர் 14) முதல் இன்னிங்ஸில் இந்தியா 367 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. இந்தியாவைக் காட்டிலும் 57 ரன்கள் பின்தங்கிய நிலையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இரண்டாவது இன்னிங்ஸில் 127 ரன்களை மட்டுமே மேற்கு இந்தியத் தீவுகள் அணியால் எடுக்க முடிந்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிராத்வெய்ட் மற்றும் போவெல் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர். அதிகபட்சமாக சுனில் அம்ப்ரிஸ் 38 ரன்களையும், ஷாய் ஹோப் 28 ரன்களையும் எடுத்தனர். ஒட்டுமொத்தமாக 6 பேர் ஒற்றை இலக்கங்களிலேயே ரன் எடுத்து வெளியேறினர். அந்த அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டெர் 19 ரன்களையும், ஹெட்மயெர் 17 ரன்களையும், தேவேந்திர பிஷூ 10 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒட்டுமொத்தமாக 46.1 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ட மேற்கு இந்தியத் தீவுகள் அணி 127 ரன்களில் சுருண்டது.
வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 16.1 ஓவர்களில் 75 ரன்களை எடுத்து விக்கெட் இழப்பின்றி வெற்றியை வசப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா 45 பந்துகளில் 33 ரன்களையும், லோகேஷ் ராகுல் 53 பந்துகளில் 33 ரன்களையும் சேர்த்து வெற்றியை தேடிக்கொடுத்தனர்.
இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய உமேஷ் யாதவ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
