சமீபத்தில் பெய்த பெருமழையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு இயல்பு நிலையை எட்டியுள்ள நிலையில், மீண்டும் கேரளாவில் மிக மிகப் பெருமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் இயற்கைப் பேரழிவை அண்மையில் கேரளா சந்தித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கேரள மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. வெள்ள பாதிப்பிலிருந்து மீண்டு, கேரளாவில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்த நிலையில், மீண்டும் அங்கு பெருமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். வரும் 6ஆம் தேதியன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி அது புயல் சின்னமாக மாறும் என்று கூறியுள்ளது. இதனால் அங்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் அது மேலும் வலுப்பெற்று வடமேற்குத் திசையில் சென்றுவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சூர், இடுக்கி மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் மிகப் பெருமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக 5ஆம் தேதி காலை 8.30 மணி முதல் 6ஆம் தேதி காலை 8.30 மணி வரை தமிழகம் மற்றும் புதுவையிலும் மிகப் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது வானிலை மையம்.
தற்போது குமரிக் கடல் பகுதியில் இருந்து வடக்கு கேரளா வரை பரவிய மேலடுக்குச் சுழற்சி தெற்கு மகாராஷ்டிரா வரை நீடிக்கிறது. இதேபோல, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை மற்றும் தமிழகக் கடலோரப் பகுதிகளில் மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதனால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
