*விழுப்புரம் மாவட்டத்தில் கர்நாடக மாநில ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட விலையில்லா
சைக்கிள் வழங்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது*
*தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மேல்நிலை வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மாநில அரசு சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன*
*மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த இந்த சிறப்புத் திட்டம் ஆண்டு தோறும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது*
*விழுப்புரம் மாவட்டத்தில் நிகழாண்டு 59 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கத் திட்டமிடப்பட்டு, கடந்த சில தினங்களாக அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன*
*இந்த நிலையில், திண்டிவனத்தை அடுத்த தழுதாளி அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்று 1,500 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்*
*அந்த சைக்கிள்களில் புத்தகம் வைக்கும் இரும்புக் கூடையில் மாணவியின் உருவப்படத்துடன் கன்னட மொழியில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன*
*தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிளில் ஜெயலலிதா படம் இருந்து வந்த நிலையில், தற்போது, அவரின் படமின்றி, மாற்று மொழியில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது அனைவர் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியது*
*கர்நாடக மாநிலத்தில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், தரமற்ற சைக்கிள்கள் வழங்கியதாக, தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை அந்த மாநில அரசு ரத்து செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது*
*இதனால், திண்டிவனத்தில் வழங்கிய சைக்கிள்களும் தரமற்றதாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது*
*இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல. சுப்பிரமணியன் கூறியதாவது*
*தமிழக அரசால் தரமான சைக்கிள்கள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. சைக்கிள்களுக்கான பாகங்கள் தனித்தனியாகப் பெறப்பட்டு, அவற்றை இணைத்து சைக்கிளை பூட்டி வழங்கப்படுகிறது*
*இவ்வாறு திண்டிவனம் பகுதியில் வழங்கிய சைக்கிளில், முன் கூடை உதிரிப் பாகம் மட்டும், அந்தத் தனியார் நிறுவனத்தால் கர்நாடகத்துக்கு அனுப்புவதற்குப் பதிலாக, தவறுதலாக நமக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது*
*உடனே பரிசோதனை செய்யப்பட்டு சைக்கிளின் தரமும் உறுதி செய்யப்பட்டுள்ளதால் பிரச்னை இல்லை என்றார் அவர்*
*SOURCE DINAMANI WEBSITE*