தாகத்தில் தவிக்கப்போகிறதா தமிழகம்?! அபாய கட்டத்தில் நிலத்தடி நீர்..!!

இன்று, உலக தண்ணீர் தினம். இந்த ஒரு நாளில் மட்டும் தண்ணீரின் முக்கியத்துவம் பற்றி பேசிவிட்டு, வழக்கமான பணிகளைத் தொடங்கி விடுவோம். எப்போதும்போல தண்ணீரைச் செலவழிக்க தயங்க மாட்டோம். ஆனால், தண்ணீரை சேமிக்க என்ன செய்கிறோம்? இந்தக் கேள்வியை ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும். காரணம், தண்ணீர்ப் பஞ்சத்தை இன்னும் சில ஆண்டுகளில் அல்லது மாதங்களில் அனுபவிக்க இருக்கிறோம். தமிழகத்தில் 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை சமீபத்தில் நடத்திய ஆய்வு பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர் அபாய கட்டத்தில் உள்ளது என்பதைத்தான் அந்த ஆய்வு சொல்கிறது. 358 பகுதிகள் மிகவும் அபாயகரமான பகுதிகளாகவும், 105 அபாயகரமான பகுதிகளாகவும், 212 அபாயகரமான பகுதிகளாகவும், 35 பகுதிகளில் நீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு உப்புத் தன்மை வாய்ந்திருப்பதாகவும் சொல்கிறது ஆய்வு. 

இது, மேம்போக்கான ஓர் ஆய்வு முடிவு. உண்மையில், இன்னும் மோசமாக இருக்கிறது நிலத்தடி நீர் மட்டம் என்கிறார்கள் நீரியல் வல்லுநர்கள். இந்த ஆய்வில் உள்ள பகுதிகளின் பெயர்களைப் பார்த்தால், அவை எல்லாம் தமிழகத்தின் மத்தியப் பகுதி மாவட்டங்கள். காவிரியின் இரண்டு பக்கமும் உள்ள கால்வாய்களை ஒட்டியிருக்கக் கூடிய நகரங்கள். ஆறுகளை ஒட்டிய பகுதிகள். இந்தப் பகுதிகள் இவ்வளவு வறட்சியாக மாறியது ஒரு நாளில் நடந்த நிகழ்வு அல்ல. இதற்கு என்ன காரணம்?


தமிழகத்தில் கால்வாய்கள் என்ற ஒன்றே இல்லாமல்போனதுதான் அடிப்படைக் காரணம். தமிழகத்தில் மழை பெய்யாமல் இல்லை. பெய்துகொண்டுதான் இருக்கிறது. சில ஆண்டுகளில் சராசரி அளவைவிட அதிகமாகவே பெய்தது. பெய்யும் மழை நீரை குளங்களில் முறையாகச் சேர்த்துவைக்கக்கூடிய பாதைகளும் நம்மிடம் இல்லை. நமது மாநிலமே சரிவான மாநிலம். மழைநீரை முறையாகக் கொண்டு சென்று நீராதாரங்களில் தேக்கிவைக்கும் பணியை நம் முன்னோர்கள் சரியாகச் செய்தார்கள். அதை நாம் செய்யத் தவறிவிட்டோம். அதைச் செய்திருந்தால், நிலத்தடி நீர் இத்தனை பாதாளத்திற்குப் போயிருக்காது. நிலத்தடி நீரை ஒரு பக்கம் தொடர்ந்து மாசுபடுத்தும் வேலையையும் செய்துகொண்டே இருக்கிறோம். நொய்யல் ஆற்றில் சாயப்பட்டறைக் கழிவு மற்றும் கெடுதலான செயல்பாடுகளையே செய்துகொண்டிருக்கிறோம்.
எந்த நிலத்தில், எந்தப் பகுதியில் எந்தப் பயிரை விளையவைக்க வேண்டுமோ... அதை விளைய வைக்காமல், நமது தேவைக்கேற்ற பயிரை சாகுபடி செய்கிறோம். மேட்டு நிலத்தில் நெல் விளைவிப்பது, தண்ணீர் இல்லாத பகுதிகளில் தண்ணீரைச் செயற்கையாக ஏற்படுத்தி வாழை, கரும்பு, மஞ்சள் பயிரிடுவது, இப்படி மானாவாரி பகுதிகளில் நீர் தேவையுள்ள பயிர்களை அதிகம் பயிரிடுகிறோம். இதனால் நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்படுகிறது. பூமியில் அளவுக்கதிகமான தண்ணீரை மட்டும் உறிஞ்சுவதில்லை. கூடவே உப்பையும் உறிஞ்சுகிறோம். இதனால் உப்பாக அல்லது அடர்த்தியாக மாறிய தண்ணீரை நீர்த்துப்போக வைக்கக்கூடிய செயல் திட்டங்கள் எதுவும் நம்மிடம் இல்லை. இத்தனை வறட்சியில் இருக்கிறது தமிழகம். நாளைக்கு உழவுமழை பெய்கிறது என வைத்துக்கொள்வோம், அதை என்ன செய்யப்போகிறோம் என்ற திட்டம் நம்மிடம் இல்லை. தினசரி ஒவ்வொரு தனிமனிதனும் ரசாயனப் பயன்பாட்டை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறான். ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் பள்ளத்தில் இருக்கக்கூடிய குளம், கழிவுநீர் தேங்கும் குட்டையாக மாறிக் கிடக்கிறது. அந்தக் கழிவுநீர் குளத்தை முறைப்படுத்தும் செயல்திட்டம் நம்மிடம் இல்லை. இதேபோல, கழிவுநீர் குளங்கள் தொடர்ந்து இருக்கும்போது நிலம் உப்பாக மாறும்.

பயிர்களுக்குத் தூவும் யூரியா போன்ற ரசாயனங்களும் மழைத் தண்ணீரில் அடித்து வரப்பட்டு கடைசியில் நீராதாரங்களில்தான் சேர்கின்றன. மூன்றாவது, பூமியின் அடி ஆழத்தில் இருந்து தண்ணீரை உறிஞ்சும்போதும் தேவையில்லாத உப்பை எடுத்துக்கொண்டு வந்து மேலே போடுகிறோம். இப்படிப் பல செயல்பாடுகளினால் தண்ணீரின் அடர்த்தி அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இது ஒரு அபாயகரமான சூழ்நிலை. நீராதாரங்கள் மிக மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. 
இதே நிலை நீடித்தால், வரக்கூடிய ஆண்டுகளில் மிகப்பெரிய சிக்கல்களை நாம் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்கு மாற்று செயல் திட்டங்களை இன்றிலிருந்து தொடங்கினாலும், இந்த நிலை மாற ஐந்து ஆண்டுகள் ஆகும். அவ்வளவு தவறுகளைச் செய்திருக்கிறோம். ஆனால், அதற்கான செயல் திட்டத்தைப் பற்றி இன்னும் நாம் சிந்திக்கவே இல்லை. 
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளிலும் நிலத்தடி நீரின் நிலை குறைந்துவிட்டது. வேதிப் பொருள்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும் நிலையில், தண்ணீரை முறைப்படுத்தி, வாய்க்கால் வழியாக ஓடவிட்டு நீராதாரங்களில் சேமிக்க வேண்டும். ஆனால், வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், நீர் குளங்களுக்குப் போகாமல் பக்கத்தில் உள்ள நிலங்களில் தேங்கி ஆவியாகிவிடுகிறது. குளங்களில் நீர் சேராததால்தான் நிலத்தடி நீர் அபாயகரமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. குளம் என்ற அமைப்புதான் சமுதாயத்தின் உயிர். மழை தரக்கூடிய அமைப்பு. குளம் உயிர் என்றால் உயிருக்கு ஆதாரமான ரத்தத்தைக் கொண்டுபோகக்கூடிய நரம்புகளாக இருப்பவை கால்வாய்கள். அவற்றைச் சிதைத்தும், ஆக்கிரமித்தும் வைத்திருக்கிறோம். நான்குவழிச் சாலைகள் அமைக்கும்போது, பெரிய கால்வாய்களுக்கு மட்டும் பாலம் போடுகிறார்கள். ஆனால், சிறு ஓடைகள் 90 சதவிகிதம் மூடப்பட்டுவிட்டன. வாகனங்கள் செல்வதற்கான பாதையை அமைக்கிறார்கள். ஆனால் தண்ணீர் செல்வதற்கான பாதையை அழிக்கிறார்கள். இதனால், கால்வாய்களின் முகமே அழிந்துகொண்டிருக்கின்றன. சாலை அமைப்பவர்களுக்குக் கால்வாய் பற்றிய முக்கியத்துவமே தெரிவதில்லை. தங்கள் பணி சாலை அமைப்பது என நினைத்து அதை மட்டும் செய்துவிட்டுப் போய்விடுகிறார்கள்.

தற்போது, ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலைப் பணி நடந்துகொண்டிருக்கிறது. அதிலும் ஏகப்பட்ட சிற்றோடைகள் அழிக்கப்பட்டுவருகின்றன. நீர்ப்பிடிப்புப் பகுதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குத் தண்ணீர் போகக்கூடிய அமைப்பை உருவாக்க வேண்டும். குளங்கள், ஏரிகள் தண்ணீர் இல்லாமல் சும்மா இருக்கின்றன என ஆக்கிரமிப்புசெய்துவருகிறோம். இவை, வெறும் குளங்கள், ஏரிகள் அல்ல. மனித குலத்திற்குத் தேவையான தண்ணீரைச் சேமிக்கும் கலன்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நமது நீண்டகால தவறுகளின் விளைவுகளால்தான் நிலத்தடி நீர் மிக அபாயத்தில் இருக்கிறது. இனிவரும் காலங்களில், ஒரு சொட்டு ரத்தத்துக்கு இணையாகத் தண்ணீர் மாறப்போகிறது. இனிமேலாவது தாமதிக்காமல் நீர் சேமிக்கும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இல்லையென்றால், மிகப்பெரிய தண்ணீர்ப் பிரச்னையைச் சந்திக்க நேரிடும். 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...