"மனித கம்ப்யூட்டர்' என, புகழப்பட்ட, கணித மேதை சகுந்தலா தேவி, உடல் நலக் குறைவு காரணமாக, பெங்களூருவில் காலமானார்.
"மனித கம்ப்யூட்டர்' என, கணித வல்லுனர்களால் புகழப்பட்டவர், கணித
மேதை சகுந்தலா தேவி, 80. மிக சிக்கலான கணிதங்களுக்கு, மின்னல் வேகத்தில் விடை அளிப்பதில் வல்லவர்.கணித திறமைக்காக, "கின்னஸ்' சாதனை புத்தகத்திலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
"பன் வித் நம்பர்ஸ், அஸ்ட்ரலாஜி பார் யூ' உள்ளிட்ட, பிரபலமான பல கணித நூல்களை இவர் எழுதியுள்ளார். இளம் வயதிலேயே, தன் கணித திறமையை நிரூபித்து காட்டி, சாதித்த பெருமைக்குரியவர்.
கடந்த, 1980ல், லண்டன் இம்பீரியல் கல்லூரியின், கம்ப்யூட்டர் துறையைச் சேர்ந்தவர்கள், சிக்கலான, 13 இலக்க எண்களை கொடுத்து, அவற்றை பெருக்கி விடையளிக்கும்படி, அவரிடம் சவால் விடுத்தனர்.இந்த சிக்கலான கணக்கிற்கு, 28 வினாடிகளில் விடையளித்து, ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். பெங்களூருவில் வசித்து வந்த சகுந்தலா தேவி, கடந்த சில நாட்களாகவே, சுவாச கோளாறால் அவதிப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலமானார்.