""குரூப் - 2 தேர்வில், தேர்வு பெற்று, மூன்று மாதங்களாக
பணி கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் தேர்வர்கள், விரைவில் பணி நியமனம் பெற,
நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, டி.என்.பி.எஸ்.சி.,
செயலர் விஜயகுமார்
தெரிவித்தார். உதவிப் பிரிவு அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்,
வருவாய்த் துறையில் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான குரூப் - 2
தேர்வு முடிவுகளுக்கு, தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு, கடந்த
மார்ச்சில், பணியிட ஒதுக்கீடு உத்தரவுகளை, டி.என்.பி.எஸ்.சி., வழங்கியது.
2,000த்திற்கும் மேற்பட்டோர், பணி ஒதுக்கீடு உத்தரவுகளை பெற்றனர்.அவர்கள், சம்பந்தப்பட்ட துறைக்குச் சென்று, பணி நியமன உத்தரவை கேட்டபோது, "தேர்வாணையத்தில் இருந்து, பெயர்கள் அடங்கிய, தேர்வு பட்டியல் வரவில்லை. வந்த பிறகே, பணி நியமனம் செய்யப்படுவீர்' என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில், தேர்வாணையமும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், காலம் தாழ்த்தி வந்தது.
நேற்று, 50க்கும் மேற்பட்ட தேர்வர்கள், தேர்வாணையத்தை முற்றுகையிட்டனர். பின், நான்கு பேர் மட்டும், உயர் அதிகாரியை சந்தித்து, பிரச்னைகளை கூறினர். இது குறித்து, தேர்வாணைய செயலர் விஜயகுமார் கூறியதாவது:
இதற்கு முன் நடந்த குரூப் - 2 தேர்வில் தேர்வு பெற்ற, 200 பேரை, பணி நியமனம் செய்வது தொடர்பாக, கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இதனால், அந்த வழக்கு முடிந்ததும், அவர்களை, முதலில் பணி நியமனம் செய்துவிட்டு, அதன் பின், இவர்களை பணி நியமனம் செய்யலாம் என, இருந்தோம். ஏனெனில், முதலில் தேர்வு பெற்றவர்களை நியமனம் செய்யாவிட்டால், "சீனியாரிட்டி' உள்ளிட்ட பிரச்னைகள் வரும். எனினும், மார்ச்சில், பணி ஒதுக்கீடு உத்தரவுகளை பெற்றவர்களை, பணி நியமனம் செய்ய அனுமதிக்கலாம் என, தேர்வாணையக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, தேர்வு பெற்றவர்களை, பணி நியமனம் செய்வதற்கு வசதியாக, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, ஒரு வாரத்திற்குள், தேர்வு பெற்றவர்களின் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.