அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், 45 கோடி பேருக்கு, தேசிய அளவிலான, "சமூக பாதுகாப்பு நிதியை' உருவாக்குவது குறித்து, மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து
வருகிறது,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
தேசிய தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பின், 45வது ஆண்டு விழா, டில்லியில் நேற்று நடைபெற்றது. முக்கிய தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:நாட்டில், அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத தொழிலாளர்கள் என, 45 கோடி பேர் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியம். இதை கருத்தில் கொண்டு, தேசிய அளவில், "தொழிலாளர் சமூக பாதுகாப்பு நிதி'யை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை, பல காலமாக உள்ளது.
இந்த கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து, மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. விரைவில்,இக்கோரிக்கை நிறைவேற்றப்படும்.
பரிசீலனை :ஓய்வூதிய திட்டம் மூலமாக, தற்போது ஓய்வூதிய நிதி வழங்கப்படுகிறது. இதில், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை வழங்கிட, உத்தரவாதம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதுவும்,மத்திய அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது. தொழிலாளர்களுக்கு, ஓய்வூதியம் வழங்கும் திட்டம், 1995 முதல் அமலில் உள்ளது. அதன்படி, 50 சதவீதத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள், குறைந்த பட்சம், 12 ரூபாயிலிருந்து, அதிகபட்சம், 500 ரூபாய் வரை ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இந்த நிலை மாற்றப்பட்டு, குறைந்தபட்சம் மாதம், 1,000 ரூபாய் ஓய்வூதியம் அளிக்க வழிவகைசெய்யப்படும்.
குறைந்தபட்ச ஊதியத்தை, தொழிலாளர்களுக்கு வழங்க உறுதி செய்யும், 1948ம் ஆண்டு சட்டத்தில், திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இந்த திருத்தங்களுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பார்லிமென்டில், சட்டமான பிறகு, தொழிலாளர்கள், மாதச் சம்பளம் என்பது, குறைந்தபட்சம், 4,000 முதல், 5,000 ரூபாயாகி விடும்.
கோரிக்கைகள்:கடந்த பிப்ரவரி, 20 மற்றும் 21ம் தேதிகளில், தொழிற்சங்கங்கள்நடத்திய, நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் போது, சில கோரிக்கைகள், அரசிடம் முன்வைக்கப்பட்டன. அந்த கோரிக்கைகள் நியாயமானவை. அதில், மாற்றுக் கருத்துக்கே இடம் இல்லை."வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்; விலைவாசி உயர்வைகட்டுப்படுத்த வேண்டும்; தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்படவேண்டும்' என்ற அந்தக் கோரிக்கைகளை, அரசு முழு மனதுடன் ஆதரிக்கிறது. இன்னும் பல கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டன. அவற்றை எல்லாம் பரிசீலனை செய்ய, நிதியமைச்சர் சிதம்பரம் தலைமையில், அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
2 கோடி பேருக்கு வேலை:ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. வேலையில்லா திண்டாட்டம், 8.3 சதவீதத்தில் இருந்து, 6.6 சதவீதமாக குறைந்து உள்ளது.உலகம் நாடுகளில், பொருளாதார வீழ்ச்சியால், மந்த நிலை ஏற்பட்டிருந்த நேரத்தில், இந்தியாவில் மட்டும் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.கிராமப்புறங்களில், வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன.
குறிப்பாக, மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாயிலாக, 30 லட்சம் பெண்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தவிர, சுயதிறமை உள்ள, 5 கோடி பேரை,உருவாக்கும் திட்டமும் உள்ளது. அதனால், 5,000 ஆக இருந்த தொழிற்கல்வி மையங்களின் எண்ணிக்கை, 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இன்னும், 1,500 மையங்களை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.
குழந்தை தொழிலாளர் தடுப்புசட்டத்தை, அரசு கடுமையாக அமல்படுத்தி வருகிறது. இதனால், 90 லட்சம் என்ற அளவில் இருந்த குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை, தற்போது, 49 லட்சமாக குறைந்துள்ளது. வருங்கால வைப்பு நிதி திட்டத்தை, நவீனப்படுத்தும் நடவடிக்கைகளும், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆன்-லைன் மூலமாக, வைப்பு நிதியை கையாளுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.