தங்கள் குழந்தைகள் கொழுக் மொழுக் என்று இருக்க வேண்டும் என்றுதான் பெரும்பாலான பெற்றோர் விரும்புகிறார்கள். ஆனால் ‘வளரும் பருவத்திலும் அந்த கொழுக் மொழுக்
குறையவில்லை என்றால், அவர்களின் ஆரோக்கியத்துக்கு டேஞ்சர்’ என்கிறது சென்னையில் எடுக்கப்பட்ட மருத்துவ ஆய்வு ஒன்று. சென்னையில் எட்டு முதல் பதினேழு வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் பலரைப் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்ட இந்த ஆய்வு, அந்தச் சிறுவர், சிறுமிகளில் பலருக்கு ரத்தக் கொதிப்பின் அறிகுறிகள் உள்ளதாக அபாய மணி அடித்திருக்கிறது. இந்த ஆய்வை முன்னெடுத்த எம்.வி டயபடீஸ் சென்டரின் மருத்துவரான விஜய் விஸ்வநாதனிடம் பேசினோம்...
‘‘மொத்தம் 1898 சிறார்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டோம். இதில் சராசரியாக 17.4 சதவீத குழந்தைகளுக்கு ரத்தக் கொதிப்புக்கான அறிகுறிகள் இருந்தது எங்களுக்கே அதிர்ச்சிதான். மிகச் சிறு வயதில் இப்படிப்பட்ட ஆரோக்கியக் குறைபாடு ஏற்படக் காரணம், பெரும்பாலும் ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமனே. குழந்தைகள் இந்த வயதில் இந்த உடல் எடை இருக்கவேண்டும், இந்த வயதில் இந்த உயரம் இருக்கவேண்டும் என ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியே மருத்துவ அட்டவணை உண்டு.
அதன்படி, எங்களால் பரிசோதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளில் சராசரியாக எல்லாருமே சுமார் பத்து சதவீதம் அதிக உடல் எடையோடு இருந்தார்கள். அவர்களில் ஓவர்வெயிட் என்று சொல்லும் அளவுக்கு எடை கூடுதலாக இருந்தவர்கள் 26.1 சதவீதம் பேர்’’ என்று சொல்லும் விஜய் விஸ்வநாதன், ரத்தக் கொதிப்புப் பிரச்னை பெரும்பாலும் டீன் ஏஜ் பையன்களிடமே அதிகம் இருப்பதாக ஆச்சரியத் தகவலையும் எடுத்து வைத்தார்.
‘‘ஆம், சிறுமிகளில் 15.7 சதவீதத்தினரிடம்தான் ரத்தக் கொதிப்பு அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் பையன்களிடம் இது 18.7 சதவீதம். வயதின் அடிப்படையில் பார்த்தால் 8 முதல் 10 வயது வரை, 11 முதல் 13 வயது வரை, 14 முதல் 17 வயது வரை என மூன்று பிரிவாக இவர்களைப் பிரித்திருந்தோம். இதில் முதல் பிரிவில் 14 சதவீதத்தினருக்கும், இரண்டு மற்றும் மூன்றாம் பிரிவுகளில் முறையே 19.4 சதவீதமும் 19.1 சதவீதமும் ரத்தக்கொதிப்புக்கான அறிகுறிகள் இருந்தன’’ என்றவர், இது எதனால் ஏற்படுகிறது என்று காரணத்தையும் குறிப்பிட்டார்.
‘‘மாணவர்கள் என்றில்லை. எல்லா வயதில் இருப்பவர்களுக்கும் இன்று உடல் பருமன் என்பது கவலைக்குரிய பிரச்னையாக இருக்கிறது. இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் சுமார் 12 சதவீதத்தினரிடம்தான் உடல் பருமன் இருந்தது. ஆனால், இன்று இது 26 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அதாவது இரட்டிப்பாகியிருக்கிறது.
நீங்கள் எந்த ஒரு பொது இடத்திலும் முன்பெல்லாம் பருமனானவர்கள் சிலரைத்தான் பார்த்திருக்க முடியும். கும்பலில் அவர்கள் தனித்துத் தெரிவார்கள். மற்றவர்களின் கேலிப் பார்வையை அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்திருக்கும். ஆனால் இப்போது அப்படியில்லை. ‘இது சகஜம்தான்’ என்பது போன்ற மனநிலை எல்லோருக்கும் வந்துவிட்டது.
உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறைதான் இந்தப் பிரச்னைக்கு முக்கியமான காரணங்கள். ‘காலையில் ராஜாபோல் சாப்பிடணும், மாலையில் சாதாரண குடிமகன் போல் சாப்பிடணும், இரவில் பிச்சைக்காரனைப்போல் சாப்பிடணும்’ என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள். ஆனால், இன்று நம் குழந்தைகள் இதை உல்டாவாக செய்கிறார்கள். காலையில் அவசரகதியில் கோழி போல கொறித்துவிட்டுக் கிளம்புகிறார்கள். மதியம் கிடைக்கிற சாப்பாட்டை சாதாரணமாகச் சாப்பிடுகிறார்கள். மாலை ஐந்து மணியிலிருந்து கிடைக்கிறதை ஒரு கட்டு கட்டுவது என்றாகிவிட்டது இன்றைய சாப்பாட்டு முறை.
அன்று விளையாட்டும், பொழுதுபோக்குகளும் அதிகமாக இருந்தது. ஆனால் இன்று... வேகமாக நடக்கக் கூட முடியாதபடி நெருக்க நெருக்கமாக கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டன. இந்த மாற்றங்கள்தான் நம் குழந்தைகளின் உடல் எடையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குழந்தைகள் சீக்கிரம் வளர வேண்டும் என்று அவர்களின் ஹார்மோனைத் தூண்டும் பானங்களை வாங்கிக் கொடுப்பதை முதலில் நாம் நிறுத்த வேண்டும்.
முடிந்தவரை அவர்களை வெளியிடங்களில் விளையாட விடுவது, மாடிகளில் ஏற படிக்கட்டை பயன்படுத்தச் சொல்வது என்று சிலவற்றில் நாம் இப்போதே கவனமாக இருக்கத்தான் வேண்டும். இல்லையென்றால் நம் வருங்காலத் தலைமுறையை இளமையிலேயே முதுமை வந்து பீடித்துக் கொள்ளும்!’’