"அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்களின், முறையற்ற இடமாறுதலை ரத்து செய்ய
வேண்டும்' என, பேராசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில், 62 அரசு கல்லூரிகளில், 5,000த் திற்கும் மேற்பட்ட
பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, 10 ஆண்டுக்கு முன், பொது
கலந்தாய்வு இடமாறுதல் அறிமுகப்படுத்தப்பட்டது. வெளிப்படையான முறையில் இட மாறுதல் நடந்து வந்தது. இந்தாண்டு, இடமாறுதல் தேதி குறித்த அறிவிப்பு வரும் முன், முறையற்ற வகையில் இடமாறுதல் நடக்கிறது. இதுவரை, 10க்கும் மேற்பட்டோர், இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்; மேலும், 10 பேருக்கு, இடமாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், உரிய முறையில் இடமாறுதல் கிடைக்கும் என காத்திருந்தோர், கலக்கமடைந்துள்ளனர். "இப்பிரச்னையில் முதல்வர் தலையிட்டு, முறையற்ற இடமாறுதலை ரத்து செய்ய வேண்டும்' என, பேராசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, அரசு கல்லூரி பேராசிரியர் மன்ற பொது செயலர் மூர்த்தி கூறியதாவது: "கல்லூரி திறப்புக்கு முன், இடமாறுதலை நடத்த வேண்டும்' என, பலமுறை அமைச்சர் மற்றும் செயலருக்கு கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேலூர் அரசு கல்லூரியில் இருந்து, இரண்டு பேராசிரியர்களுக்கு ராணிமேரி கல்லூரிக்கும்; கும்பகோணம் அரசு கல்லூரி பேராசிரியருக்கு, நந்தனம் கல்லூரிக்கும் பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் பணம் செலவழித்து, பேராசிரியர்கள் இடமாறுதல் பெறுகின்றனர். கிராமப்புறங்களை விட, நகர்புறங்களில் இடம் மாறுதல் பெற, அதிக தொகை வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு, மூர்த்தி கூறினார்.