வரும் அக்டோபர் மாதத்தில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பப்படும் என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து கடந்த 1ம் தேதி இரவு 11.41 மணிக்கு பி.எஸ்.எல்.வி, சி.22 ராக்கெட்
விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் டில் நேவிகேஷன் செயற்கை கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ், 1 ஏ பொருத்தப்பட்டிருந்தது.
ராக்கெட் வெற்றி குறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: பி.எஸ்.எல்.வி வரிசை யில் இதுவரை 24 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன. இதில் 23 ராக்கெட்டுகள் வெற்றி பெற்றுள்ளன. தற்போது இந்தியாவில் முதன் முறையாக நேவிகேஷன் செய ற்கை கோள், பி.எஸ்.எல். வி, சி.22 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. ஐ.ஆர்.என்.எஸ். எஸ், 1 ஏ என்ற அந்த நேவிகேஷன் செயற்கை கோள், வழிகாட்டி செயற்கை கோளாக செயல்படும். இதன் மூலம் 2 வழிகளில் சேவையளிக்கப்படும். பொதுமக்களுக்கான சேவை, நிறுவனங்களுக்கான சேவை என்று அந்த சேவைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் தொகுப்பில் மொத்தம் 7 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ஸீ 1420 கோடி. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்,1 ஏ செயற்கை கோள் பூமியிலிருந்து குறைந்த பட்சம் 284 கிமீ, அதிகபட்சம் 20 ஆயிரத்து 560 கிமீ வட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டு குறைந்த பட்சம் 282.46 கிமீ, அதிகபட்சம் 20 ஆயிரத்து 625 கிமீயில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. செயற்கை கோளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்து இயங்க தொடங்கியதும் கர்நாடக மாநிலம் ஹசனில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டறையிலிருந்து, இந்த செயற்கை கோள் சரியான இடத்தில் நிலை நிறுத்தப்படும்.
தகவல்களை தெரிவிப்பதற்காகவும் பேரிடர் காலங்களில் எச்சரிக்கைகளை பெறுவதற்காகவும் இந்த செயற்கை கோள் பயன்படும். இது மொத்தம் 10 ஆண்டுகள் இயங்கும்.
விண்வெளித்துறையில் இஸ்ரோ குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளது. இந்த துறையில் உள்ள 400 க்கும் மேற்பட்ட நிறுவனத்தார் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றுகின்றனர். ஐ.ஆர்.என்.எஸ்.எஸ், 1 ஏ மூலம் தகவல்களை பெறுவதற்கு தனியார் நிறுவனங்களுக்கான கட்டணம் முடிவாகவில்லை.
உத்தரகாண்ட்டில் நடந்த வெள்ளச்சேதம், நிலச்சரிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது அனுப்பப்பட்டுள்ள செயற்கை கோள் மூலம் பேரிடர் குறித்த தகவல்களை தெரிந்து, எச்சரிக்கை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். 2013,14ம் நிதியாண்டில் ஜி.எஸ்.எல்.வி ,15,16 ஆகிய இரு ராக்கெட்டுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அவை விரைவில் ஏவப்படும்.
இஸ்ரோ சார்பில் தொடர்ச்சியாக செயற்கை கோள்களை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செயற்கை கோள்கள் ஸ்ரீஹரிகோட்டா மற்றும் பிரெஞ்ச் கயானா விண்வெளி மையங்களிலிருந்து ராக்கெட்டுகள் மூலம் செலுத்தப்படும். பி.எஸ்.எல்.வி, சி.25 ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் விண்கலம் அனுப்பப்படும். இந்த விண்கலம் செவ்வாயை சென்றடைய ஒரு மாதம் ஆகும் என்பதால் செவ்வாய் கிரகத்தை அந்த விண்கலம் நவம்பர் 28 அல்லது 29ம் தேதிகளிலிருந்து சுற்றிவர தொடங்கும்.
இந்த மாத இறுதியில் இன்சாட்,3 டி என்ற செயற்கை கோள் அரைனா, 5 ராக்கெட் மூலம் பிரெஞ்ச் கயானாவிலிருந்து விண்ணில் செலுத்தப்படும். அதேபோல கம்யூனிகேஷன் சேட்லைட் என்ற வகையிலான செயற்கை கோள்கள் ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்படும். ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஜி,சாட்,14 செயற்கை கோள் செலுத்தப்படும். இந்த ஆண்டில் ஜி,சாட்,7 என்ற செயற்கை கோள் பிரஞ்ச் கயானாவிலிருந்து விண்ணில் செலுத்தப்படும்.
வரும் டிசம்பர் மாதத் தில் வெளிநாட்டு செயற்கை கோளான ஸ்பாட்,7 என்ற செயற்கை கோள் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும்.
வரும் ஜனவரி மாதத் தில் ஜி.எஸ்.எல்.வி மார்க்,3 பரிசோதனை ராக்கெட் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல 2014 மார்ச்சுக்குள் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்,1 டி செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இஸ்ரோ சார்பில் நிலவுக்கு மனிதனை அனுப்பி ஆய்வு செய்வது தொடர்பாக ரஷ்ய நாட்டுடன் பேசி வருகிறோம். நிலவில் இறங்கும் விண்கலம், அதற்கான தொழில்நுட்பம் போன்றவை குறித்து விவாதித்து வருகிறோம். அதேபோல சந்திராயன்,2 செயற்கை கோளும் கூட்டு முயற்சியில் ஏவப்படும். ஜி.எஸ்.எல்.வி தொழில் நுட்பம் குறித்த மேம்பாட்டு நிலைகளை ஆய்வு செய்து வருகிறோம். ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை ஏவுவதற்கு முன்பாக 35 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் அடிப்படையில் அந்த தொழில் நுட்பம் மேம்படுத்தப்பட்டு ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.