மோதலில் ஈடுபடும் மாணவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களுக்கு, நன்னடத்தை ஆலோசனை வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதுகுறித்து அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, மோதலில் ஈடுபடும் கல்லூரி மாணவர் பற்றிய விவரங்களை சேகரித்து அனுப்புமாறு கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. "கல்லூரிக்குள் மாணவர்கள் சண்டையிடுவதை கண்காணிப்பதை போல, கல்லூரிக்கு வெளியில் சண்டையிடுவதையும் கண்காணிக்க வேண்டும்' என கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாணவர்களின் பெற்றோர் அழைக்கப்பட்டு, மாணவர்களின் இந்த செயல்பாடு, எதிர்காலத்தை பாதிக்கும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். போலீசாரால் அடையாளம் காணப்பட்டு பட்டியலிடப்படும் மாணவர்களுக்கு, சிறப்பு நிபுணர்கள் உதவியுடன், "கவுன்சிலிங்' வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மோதலில் அதிகம் ஈடுபடும், பச்சையப்பன், நந்தனம், மாநில கல்லூரி மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க, அக்கல்லூரி பேராசிரியர்களையும் இணைத்து, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின், சென்னை மண்டல இணை இயக்குனர் தலைமையில், கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிகிறது. இதில், மாணவர்களின் மோதலுக்கு, என்ன காரணம் என்பது போன்ற விவரங்களை சேகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.