பி.எட். படிப்புக்கான ‘கட்–ஆப்’ மதிப்பெண் நாளை வெளியீடு; 30–ந்தேதி கலந்தாய்வு

பி.எட். படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு 30–ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம்
5–ந் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது.
3 ஆயிரம் இடங்கள்
தமிழ்நாட்டில் அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் சுமார் 3 ஆயிரம் பி.எட். இடங்கள் இருக்கின்றன. அரசு கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 90 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும் ஒற்றைச்சாளர முறையில் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுவது வழக்கம்.
மாநிலம் முழுவதும் உள்ள 600–க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளில் உள்ள 60 ஆயிரம் பி.எட். இடங்கள் கல்லூரி நிர்வாகத்தாலே நிரப்பப்படும். இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்கள் உள்பட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பி.எட் இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்புவதற்காக கடந்த 9–ந் தேதி முதல் 16–ந் தேதி வரை விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன.
கட் ஆப் மதிப்பெண் நாளை வெளியீடு
12 ஆயிரத்திற்கும் மேல் விண்ணப்பங்கள் விற்பனையானது. இருப்பினும், 11,950 விண்ணப்பங்களே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டன. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் செயல்படும் தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை பிரிவு விண்ணப்பங்களை பரிசீலித்தது.
இந்த நிலையில், பி.எட். படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் நாளை (வியாழக்கிழமை) மாலை வெளியிடப்படுகிறது. பாடப்பிரிவு, இடஒதுக்கீடு வாரியான கட் ஆப் மதிப்பெண் மற்றும் கலந்தாய்வு விவரங்களை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் இணையதளத்தில் (www.ladywillingdoniase.com) மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
கலந்தாய்வு எப்போது?
கட் ஆப் மதிப்பெண் வெளியிடப்படுவதை தொடர்ந்து, மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு 30–ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 5–ந்தேதி வரை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெறும்.
கலந்தாய்வுக்கான அழைப்புக்கடிதம் மாணவ–மாணவிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்படும். கடிதம் கிடைக்கவில்லை என்றாலும் உரிய கட் ஆப் மதிப்பெண் இருந்தால் குறிப்பிட்ட தேதியில் கலந்தாய்வில் மாணவர்கள் நேரில் கலந்துகொள்ளலாம் என்று தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளரும், லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் முதல்வருமான பேராசிரியை பரமேஸ்வரி தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...