அந்தமானை தாக்கிவிட்டு ஆந்திராவை நோக்கி வரும் லெஹர் புயலால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் உருவான லெஹர் புயல் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயருக்கு தெற்கே
மற்றும் தென்கிழக்கே 170 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தமானில் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் பயங்கர சூறாவளி காற்றுடன் நேற்று இரவு 11.15 மணியளவில் லெஹர் புயல் கரையை கடந்தது. தற்போது ஆந்திராவை நோக்கி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் லெஹர் புயல் 28ஆம் தேதி மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என தெரிகிறது.
இதன்காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே வான்வெளியில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. சென்னை பிராட்வே, அடையார், திருவான்மியூர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் அதிகாலையில் கனமழை கொட்டியது.