ஓய்வூதியம் என்பது தர்மம் அல்ல: சுதந்திர போராட்ட தியாகிக்கு 4 வாரத்துக்குள் ஓய்வூதியம் வழங்க வேண்டும் அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது தர்மம் போல் அரசு அதிகாரிகள் எண்ணக்கூடாது என்றும் சுதந்திர போராட்டத் தியாகிக்கு 4 வாரத்துக்குள் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு, சென்னை
ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை சேர்ந்தவர் சுதந்திரபோராட்ட தியாகி என்.சுப்பிரமணியம். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
ஜெயிலில் அடைப்பு
இந்தியன் சுதந்திர லீக் மற்றும் இந்திய தேசிய ராணுவம் ஆகியவற்றில் பணியாற்றி, 1944–ம் ஆண்டு பர்மாவில் ஆங்கிலேயர் படையினரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டேன்.
இதையடுத்து சுதந்திரபோராட்ட தியாகி ஓய்வூதியம் கேட்டு, சென்னை மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பம் செய்தேன். அந்த விண்ணப்பத்துடன், என்னுடன் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த எம்.சுப்பிரமணி, இந்திய தேசிய ராணுவ அமைப்பின் தமிழக தலைவர் பி.கே.சேர்வை உள்ளிட்டோரின் ஒப்புதல் சான்றிதழ்களையும் சமர்ப்பித்தேன்.
மீண்டும் மறுப்பு
என்னுடைய விண்ணப்பத்தை பரிசீலித்த கலெக்டர், 2005–ம் ஆண்டு எனக்கு ஓய்வூதியம் வழங்கும்படி தமிழக பொதுத்துறை செயலாளருக்கு பரிந்துரை செய்தார். ஆனால், இந்த பரிந்துரையை செயலாளர் நிராகரித்துவிட்டார்.
இதுகுறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, என்னுடைய விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலிக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து மீண்டும் பரிசீலித்த பொதுத்துறை செயலாளர், என்னுடன் ஜெயிலில் இருந்தவர்கள் வழங்கிய சான்றிதழ் உண்மை தன்மையில் சந்தேகம் உள்ளதாக கூறி ஓய்வூதியம் வழங்க மறுத்து உத்தரவிட்டார். எனவே, எனக்கு சுதந்திர போராட்ட தியாகி ஓய்வூதியம் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
சர்ச்சை இல்லை
இந்த மனுவை நீதிபதி கே.ரவிசந்திரபாபு விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
மனுதாரர் என்.சுப்பிரமணியம் சுதந்திர போராட்ட தியாகி என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை. இவருக்கு சுதந்திர போராட்ட தியாகி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று பொதுத்துறை செயலாளருக்கு, சென்னை மாவட்ட கலெக்டரும் பரிந்துரை செய்துள்ளார்.
ஆனால், மனுதாரருடன் ஜெயிலில் இருந்தவர்கள் கொடுத்த ஒப்புதல் சான்றிதழ் உண்மை தன்மை மீது சந்தேகம் கொண்டு, அவருக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்து, பொதுத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
ஓய்வூதியம் தர்மம் அல்ல
ஆனால், மனுதாரருடன் ஜெயிலில் இருந்தவர்கள் கொடுத்த சான்றிதழ்கள் மீது அரசு செயலாளர் சந்தேகம் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அவை உண்மை இல்லை என்று எந்த அடிப்படையில் முடிவுக்கு வந்துள்ளார் என்பதை என்னால் புரிந்துக் கொள்ளவில்லை. அரசு அதிகாரியின் செயல்பாடு எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.
மேலும், மனுதாரருக்கு இப்போது 87 வயது ஆகிறது. சுதந்திரத்துக்காக போராடியவர், இந்த வயதிலும் ஓய்வூதியத்துக்காக போராடி வருகிறார். இதுபோன்ற தியாகிகளுக்கு, அரசு ஓய்வூதியம் வழங்குவது என்பது தர்மம் போல் அரசு அதிகாரிகள் எண்ணக்கூடாது.
வழங்கவேண்டும்
இதுபோன்ற நபர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் அரசு அதிகாரிகள் காலதாமதம் வழங்க கூடாது. எனவே மனுதாரர் ஏற்கனவே வழங்கிய சான்றிதழ்களின் அடிப்படையில், அவருக்கு 4 வாரத்துக்குள் ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க மறுத்த பொதுத்துறை செயலாளரின் உத்தரவை ரத்து செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி ரவிசந்திரபாபு கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...