நாமக்கல் மாவட்டம் முழுவதும், 100 சதவீத தொடக்கப்பள்ளிகள், மாற்று ஏற்பாடுகளுடன் செயல்பட்டதாக, கல்வி அதிகாரி தெரிவித்தார்.
தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்களில், துவக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி,
பட்டப்படிப்பு முடித்த, இளநிலை படிப்பு முடித்த என்பது
உள்ளிட்ட பல பிரிவுகளில், ஆசிரியர்கள் சங்கம் மற்றும் கூட்டணி அமைத்து,
தங்களது கோரிக்கை தொடர்பாக, அரசிடம் அல்லது கல்வி அதிகாரிகளிடம் பேசி
தீர்த்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி சார்பில், ஆறாவது ஊதியக்குழுவில், மத்திய அரசு இடைநிலை
ஆசிரியர்களுக்கு வழங்கி உள்ள ஊதியத்தை, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு,
2006, ஜனவரி, 1ம் தேதி முதல் வழங்க வேண்டும்.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய
வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பகுதி
நேர சிறப்பாசிரியர்களை முழுநேர ஆசிரியர் நிலைக்கு உயர்த்த வேண்டும்.
கல்வித்துறை அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும்.
நடுநிலைப்பள்ளி தமிழாசிரியர், வரலாறு பட்டதாரி
ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட, ஏழு அம்ச கோரிக்கையை
வலியுறுத்தி, கடந்த, 26ம் தேதி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், நேற்று, தொடக்கக் கல்வி ஆசிரியர்
சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜேக்) சார்பில், ஒரு நாள் அடையாள
வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
ஆனால், ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு
இல்லாததால், வேலை நிறுத்தப்போராட்டம், அரசின் கவனத்திற்கு முறையாக கொண்டு
செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், சில குறிப்பிட்ட சங்கங்கள்,
ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுத்தியதாக
குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, நாமக்கல் மாவட்ட எருமப்பட்டி வட்டார செயலாளர் ராமராசு கூறியதாவது:
ஆசிரியர் கூட்டணி மற்றும் சங்களுக்குள் ஒற்றுமை
இல்லாததால், நியாயமான கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல
முடியாத நிலை உள்ளது. சில கூட்டணி அமைப்பினர், ஆசிரியர்களை
கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் கையெழுத்து பெற்று, வேலை நிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளனர்.
மேலும், ஆசிரியர் சங்கங்களுக்குள், தங்கள்
சங்கத்தில் ஆட்கள் சேர்ப்பது மட்டுமே குறியாக உள்ளனர். அதனால்,
ஆசிரியர்களுக்குள் ஈகோ பிரச்னை ஏற்பட்டு, பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.
எங்கள் கூட்டணி நடத்திய வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மற்ற அமைப்பு
நடத்திய போராட்டமும், ஒருங்கிணைப்பு இல்லாததால், பிசுபிசுத்து போனதாகத்
தான் கருதுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பாபு கூறியதாவது:
மாநிலம் முழுவதும் தொடக்கக் கல்வி
கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் முழுமையாக செயல்பட்டதாக தகவல்கள்
வந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, அனைவருக்கும் கல்வி
இயக்கத்தில் பணியாற்றும் ஆசிரியர், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடாத
ஆசிரியர் ஆகியோர் அனைத்து பள்ளிக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, முழுமையாக
பாடங்கள் நடத்தப்பட்டது. நூறு சதவீத பள்ளிகள் எவ்வித பிரச்னையும் இன்றி
செயல்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.