உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கவர்னர் ரோசய்யா: குடும்பம் மற்றும் சமுதாயத்தின் தூண்களாக பெண்கள் விளங்குகின்றனர்.பாலியல் வன்கொடுமை,
வரதட்சணை கொடுமை உள்ளிட்ட கொடுமைகளில் இருந்து பெண்களை விடுதலை செய்ய, நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும். இந்த இனிய நாளில் உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் ஜெயலலிதா: கல்வி அறிவு பெற்று, பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் வகையில், தமிழகத்தில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், வீரதீர செயல்களை புரிந்த பெண்களுக்கு, கல்பனா சாவ்லா விருது, சிறந்த பெண்களுக்கு ‘அவ்வையார் விருது போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.பெண்கள் தங்கள் வாழ்வில் எதிர் கொள்ளும் சோதனைகளை, உறுதியுடன் எதிர் கொண்டு அவற்றை வெற்றி படியாக்கி, புதிய சரித்திரம் படைக்க உறுதி ஏற்போம் என கூறி, இந்த இனிய நாளில் அனைத்து மகளிருக்கும், எனது மகளிர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக தலைவர் கருணாநிதி: மகளிர் சமுதாயத்தின் எழுச்சிக்கு வழிவகுக்கும், உலக மகளிர் நாள் மார்ச் 8ம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. திமுக ஆட்சியில் பெண்களின் கல்வி வளர்ச்சிக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மகளிர் மறுமண நிதியுதவித் திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை. இதை சுட்டிக்காட்டி, மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தமிழக மகளிர் சமுதாயம் முழுமைக்கும் தெரிவித்து மகிழ்கிறேன்.
விஜயகாந்த் (தேமுதிக) : பெண் அடிமைத்தனம் ஒழியவேண்டும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைத்திட வேண்டும். ஒரு பெண் முதலமைச்சராக இருக்கின்ற தமிழ்நாட்டில், பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. கொலை, கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமை, போன்ற பெண்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையை மாற்றிட, தமிழக அரசு பெண்களுக்கு தற்காப்புக்கலைப் பயிற்சியை அளிக்கவேண்டும். பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி, நல்வாழ்வு பெறவும், தேமுதிக சார்பில் எனது மகளிர்தின நல்வாழ்த்துகளை இந்த இனிய நாளில் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு தலைவர்கள் கூறிஉள்ளனர்.