காணாமல் போன மலேசிய விமானத்தை தேடுவது சிக்கலானதாக உள்ளதென மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தை தேடும் பணியில் உதவ வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டுள்ளார்.
விமானம் குறித்த விசாரணை தொடர்பாக காவல்துறை மற்றும் அரசு சார்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விசாரணையின் போக்கே மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளிடமும் ரேடார் மற்றும் செயற்கைக் கோள்களில் பதிவான விவரங்களை அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
விமானம் கடைசியாக பயணித்ததாக கூறப்படும் இரண்டு பகுதிகளில் தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 11 நாடுகள் தேடுதலில் இணைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.
விமானத்தின் பைலட்டுகள் மற்றும் ஊழியர்களின் பின்னணி குறித்து விசாரணை திரும்பியுள்ளதால், விமானிகளின் வீடுகளில் அதிகாரிகள் சோதனையிட்டனர். விமானிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல பயணிகள் மற்றும் விமான பொறியாளர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே புதிய அறிவுறுத்தல்கள் வரும்வரை தேடுதல் பணியை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. விமானத்தின் சிதைந்த பாகங்கள் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால், தேடுதல் பணியை கைவிடுவதாக ஜப்பான் மற்றும் வியட்நாம் நாடுகள் தெரிவித்துள்ளன.
இது குறித்து மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிசாமுதின் ஹூசைன் கூறுகையில், தேடுதல் பணி புதிய தளத்துக்கு சென்றுள்ளது. சர்வதேச நாடுகளின் இந்த தேடுதல் பணி மிகவும் சிக்கலானதாக உள்ளது. விமானத்தை தேடும் இடங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குறுகிய கடல் பகுதிகளில் நடைபெற்ற தேடுதலை தற்போது விரிவுபடுத்தியுள்ளோம். 11 நாடுகளிலும், ஆழ்ந்த கடல் பகுதிகளிலும் விமானத்தை தேடி வருகிறோம். தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன என தெரிவித்தார்.