தொழிலாளி ஒருவருக்கு தொகையை திருப்பித் தருவதில் தாமதம் செய்ததால், வருங்கால வைப்பு நிறுவனத்துக்கு,
சென்னை நுகர்வோர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
மனு தாக்கல்
அனகாபுத்துாரைச் சேர்ந்தவர், கண்ணன். சென்னை பிரகாசம் சாலையில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலையில், பணியாற்றி ஓய்வு பெற்றார்.
தன், வருங்கால வைப்பு நிதி மற்றும் பென்ஷன் திட்ட தொகைகளை திருப்பி அளிக்குமாறு கோரி, காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர்
கூட்டுறவு பண்டகசாலை மற்றும் ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன
மண்டல ஆணையரிடம் முறையிட்டார். பல முறை விண்ணப்பித்தும் பலனில்லை. இதுகுறித்து, சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில், அவர் மனு தாக்கல் செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தாக்கல் செய்த பதில் மனுவில், 'எங்கள் நிறுவனத்தில் இருந்து, மனுதாரரின், அனைத்துவித கணக்குகளையும் முடித்து, வருங்கால வைப்பு
நிறுவன அலுவலகத்துக்கு அனுப்பி விட்டோம்' என, தெரிவிக்கப்பட்டது.
வருங்கால வைப்பு நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில், 'விண்ணப்பத்தில் படிவம் -9 மற்றும் 10-பி ஆகியவற்றில், ஏற்கனவே பணியாற்றிய நிறுவனத்தின் அதிகாரபூர்வ கையெழுத்து இல்லை' என, கூறப்பட்டது.
குறை கூறுவது ஏன்?
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை நுகர்வோர் நீதிமன்றம், அளித்த தீர்ப்பு:
பண்டகசாலையும், பி.எப்., நிறுவனமும், ஒருவருக்கொருவர் குறை கூறிக் கொள்கின்றனர். கையெழுத்து இல்லை என்பதற்காக, பி.எப்., பிடித்தம் தொகையை தாமதப்படுத்தக்கூடாது. எனவே, தொழிலாளியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பி.எப்., தொகை, பென்ஷன் தொகை ஆகியவற்றை 10 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டும்.
மன உளைச்சலுக்கு இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். வழக்கு செலவினங்களுக்கு 2,000 ரூபாய் வழங்க வேண்டும் இவ்வாறு உத்தரவிட்டது.