"அனைவரும் ஓட்டளியுங்கள்' என்கிறது, தேர்தல் கமிஷன். "நாங்கள் ஓட்டளிக்க மாட்டோம். எங்கள் ஓட்டுகளைப் பெறும் அளவுக்கு,
யாருக்கும் தகுதி இல்லை' என்கிறது, இளையபாரதம். கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் பேசும் அரசியல் உரையாடல்...
சிந்த்வா: நான், இந்த தேர்தல்ல, என்னோட முதல் ஓட்டை பதிவு பண்ணப் போறேன். நல்லவங்களைப் பத்தி தெரிஞ்சுக்கற அளவுக்கு அனுபவம் இல்லைன்னு நினைக்கிறேன். என்னோட ஓட்டை கெட்டவங்களுக்குப் போட்டு, அப்புறம் தெரிஞ்சா, கஷ்டமாயிடும். அதனால "நோட்டா' போடப் போறேன்.
பத்மபிரியா: என்னைப் பொறுத்தவரை, மூன்று தடவை முதல்வராயிருக்கிற மோடி பிரதமராகணும். அவருக்கு ஓட்டுப்போட்ட, என்னோட ஓட்டு வீணாயிடாதுன்னு நம்புறேன். ஆனா, என்னோட தொகுதியில இருக்கிற,
கூட்டணி வேட்பாளர், அதுக்குத் தகுதியானவராங்கறதையும் கவனிச்சுட்டு இருக்கேன். அவருக்குத் தகுதி இல்லேன்னு தெரிஞ்சதுன்னா, "நோட்டா' போட்டுடுவேன்.
கணேஷ்: சுதந்திரம் வாங்கி 67 வருஷங்களாயிடுச்சு. நாம, இன்னும் உண்மையான மக்களாட்சியைப் பார்க்கவே இல்லை. அதுக்காக, நாம வெட்கப்படணும். உண்மையான மக்களாட்
சின்னா என்னன்னு, மக்களுக்கும் தெரியாது; அரசியல்வாதிகளுக்கும் முழுசா தெரியாது. இலவசங்களைக் கொடுத்து, கெடுத்து மக்களை கேள்வி கேட்க முடியாத அடிமைகளாக்கி வைச்சிருக்காங்க. என்னோட ஓட்டும் "நோட்டா'வுக்கு தான்.
காமேஷ்: விலைவாசி உயர்வு, ஊழல் மிகப் பெரிய பிரச்னைகளாக இருக்கு. கட்சிகள் போடுற வேஷம் பலவிதம். அன்னாஹசாரே பா.ஜ., ஆதரவாளர், உதயகுமார் ஆம் ஆத்மி ஆதரவாளர். அப்போ, எப்படி நடுநிலையா போராடுவாங்க? போபால் சம்பவத்துக்கு இன்னும் தீர்வு கிடைக்கலை. மீத்தேன் வாயுத் திட்டத்தால, பல லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் மலடாகி, விவசாய சந்ததிகள் பிச்சைக்காரர்களாகிற
வாய்ப்பு இருக்கு. பக்கத்து மாநிலங்களுக்குள்ளே நதிநீர் பிரச்னை தீர்க்கப்படாம இருக்கு.
கடற்கரையில தாதுமணல் கொள்ளை நடக்குது. விவசாயிகள் தற்கொலை செஞ்சுக்கறாங்க. அவங்களை பாதுகாக்கத் தவறியது யார்? தீவுத்திடல், பரமக்குடி, நெய்வேலி துப்பாக்கிச் சூடுகளுக்கு என்ன தீர்வு? பொதுமக்களுக்கு ஜனநாயகத்துல மதிப்பில்லையா? அரசுன்னா என்ன? அரசியல்னா என்னன்னு பாடப்புத்தகத்துல இல்லை. அதனாலதான் இளைஞர்கள் கேள்வி கேட்கறது இல்லை. இப்படி பல கேள்விகள் மனசுக்குள்ளே இருக்கு. அதனால, "நோட்டா'தான் என்னோட ஓட்டு.
சரண்ராஜ் : நம்ம நாட்டோட அரசியல் ஒரு "காமெடி ஷோ'.கடந்த மூணு மாசமா, அ.தி.மு.க., தவிர மத்த கட்சிகள் எல்லாம் விஜயகாந்தையே சுத்தி வந்தாங்க. இதுக்குப் பின்னால என்ன இருக்கு? கொள்கையா? மக்கள் செல்வாக்கா? எளிமையா? அவங்களைக் கேட்டுப்பாருங்களேன். ஒண்ணுமே சொல்ல மாட்டாங்க.
கூட்டணி வைச்சுக்கிட்டவங்க, புகழ்ந்து பேசுறாங்க. கூட்டணி படியாதவங்க இகழ்ந்து பேசுறாங்க. அப்போ யார் அறிவாளி? யார் முட்டாள்? வேட்பு மனு தாக்கல் செய்றப்போ, பல விவரங்களை, தேர்தல் கமிஷன் கேட்குது. அதை எல்லாம், வாக்காளர்களோட பார்வைக்கு கொண்டு வரவேண்டியது அவங்களோட பொறுப்பு. அதை எல்லாம் செய்றது இல்லை. ஆனா, "நேர்மையா ஓட்டளிங்க'ன்னு சொல்றாங்க. நேர்மையை எப்படி அளக்குறது? குற்றப்பின்னணி, சொத்து விவரம், சொந்த வாழ்க்கை, பொது வாழ்க்கை
பத்தி எல்லாம் தேர்தல் ஆணையம் விசாரிச்சு, வேட்பாளர்களைப் பத்தின உண்மைகளை மக்களுக்கு
தெளிவுபடுத்தணும். அரசியல்வாதிகளுக்கு, நம்ம நாட்டோட ஒற்றுமை, வெளிநாட்டு உறவு, தொலைநோக்குப் பார்வைன்னு எது பத்தியும் கவலை இல்லை. இலையைக் கொடுத்து, ஆட்டை கசாப்புக் கடைக்கு இழுத்துக்கிட்டு போற மாதிரி, இலவசங்களைக் கொடுத்துட்டு, கொள்ளையடிக்கிறாங்க.
ஜாதி, மதத்தைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்தி, சட்டம் - ஒழுங்கை குலைச்சு, மக்களைப் பதற்ற நிலைக்கு ஆளாக்கி, உணர்ச்சிவசப்படுற நேரத்துல, தனக்கு சாதகமான முடிவுகளை எடுத்துக்கறாங்க. இப்படி நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். அதனால, என்னோட ஓட்டு, "நோட்டா'வுக்குத்தான்.