ஒரு நாட்டை அழிக்க என்ன சென்ன செய்யலாம். நாட்டு மக்களுக்கு பொய் சொல்ல கற்றுக் கொடுக்கலாமா? திருட கற்றுக் கொடுக்கலாமா?
சுயநலமாக வாழ கற்றுக்கொடுக்கலாமா? பெண்ணாசையைக் கற்றுக் கொடுக்கலாமா? என்ற கேள்விக்கு வள்ளுவர் கொடுத்த பதில், நாட்டு மக்களுக்கு குடிக்க கற்றுக் கொடுங்கள் என்பதுதான். குடி அனைத்து வித சூதுகளையும் கொண்டு வந்துவிடும் என்கிறது வள்ளுவரின் எச்சரிக்கைக் குரல். தற்போது மக்களுக்கு குடி பழகிவருகிறது, அப்படியெனில் எதிர்காலம்.....?
போதை புத்தியை தடுமாறவைக்கும். மனைவி, தாய் என்ற பேதம் பார்க்கவிடாது. குடிப்பதற்காக என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற மன நிலையை கொண்டுவந்துவிடும். ஐடி ஊழியர் உமா மகேஸ்வரி மேற்கு வங்க வாலிபர்களால் கொலை செய்யப்பட்டதற்கு அடிப்படை காரணம் போதை. பிப்ரவரி மாதம் திருவள்ளூரில் போதையில் நண்பனின் பேச்சைக்கேட்டு பெற்ற தாயையே கொலை செய்தார் பாபு என்னும் வாலிபர். பிழைப்புத்தேடி வந்த ஒடிசா பெண் கொலை செய்யப்பட காரணம் இந்த குடியே.
அதே மாதம் பூந்தமல்லியில் 2வது மாடியில் இருந்து தள்ளி மனைவியை கொலை செய்தார் வீரமணி என்னும் தொழிலாளி. இவருக்கும் குடிப்பழக்கத்தினால் வீட்டில் ஏற்பட்ட பிரச்னை தான் காரணம். குடியினால் விபத்துக்கள் ஒருபுறம், கொலைகள் ஒருபுறம், குடிகார கணவனின் அடியும், சித்ரவதைகளும் தாளாமல் தற்கொலை செய்து கொள்ளும் மனைவிகள் ஒரு புறம். குடி பிரச்னையால் வறுமை காரணமாக குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளும் பெண்கள் ஒருபுறம் என குடியால் தினம் தினம் பலி எண்ணிக்கை தொடர்கிறது.
தற்போது ஒரு பெண்ணை திருமணம் செய்துவைக்கும் போது மாப்பிள்ளைக்கு குடிப்பழக்கம் உண்டா என்பதுதான் நடுத்தர மக்களின் முதல் கேள்வியாக இருக்கிறது. எங்கே குடியால் தன் பெண் வாழ்வு சீரழிந்து விடுமோ என்ற பயம் தான் அதற்கு காரணம். ஏனென்றால் குடிக்காக பிச்சை எடுப்பதில் துவங்கி, செயின் அறுப்பது, சொந்த வீட்டில் திருடுவது, கொள்ளை அடிப்பது என சூது தினம் தினம் வளர்ந்து கொண்டே போகிறது. இதற்கு சகோதரியையே தாக்கி நகை கொள்ளை அடித்துப்போன சகோதரன், குடி போதையில் மொபட்டை எரித்த வாலிபர், குடிபோதையில் பின் நம்பர் மறந்து பணம் வரவில்லையென ஏடிஎம்மை உடைத்த வாலிபர் இவர்களெல்லாம் ஒரு சாட்சி.
கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள் ஒருபுறம் இருக்க ரோட்டில் போகும் பெண்களிடம் ஆபாசமாக பேசுவது, ஆபாசமாக நடந்து கொள்வது ரோட்டில் தன்னிலை மறந்து விழுந்து கிடப்பது என அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொள்ளும் இவர்களால் பெண்கள் மாலை நேரமானால் பயந்து பயந்து வெளியே வரவேண்டி இருக்கிறது. 11 வயது சிறுவன் முதல் வயதானவர் வரை படிக்காத கூலித்தொழிலாளி முதல் நன்கு படித்து நல்ல நிலைமையில் இருப்பவர் வரை பேதம் இல்லாமல் வளைத்துப்போட்டிருக்கிறது குடி.
கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் குடி போதையில் வண்டி ஓட்டியதால் பிடிபட்டு வழக்குப் போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 749. கலாச்சார தலைநகரமான சென்னை குடிகாரர்களின் தலைநகரமாகிக்கொண்டிருக்கிறது. மாற்றம் ஒன்றே மாறாததது என்பார்கள். இந்த குடிகாரர்களிடம் இருந்து தமிழக மக்களுக்கு விடிவு பிறக்குமா? நல்லதொரு மாற்றம் காணுமா தமிழகம்?...