"கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இழப்பீடு கணக்கிட நீதிபதி நியமனம் சரியே

"கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு நிர்ணயம் செய்வதற்காக
ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம் செல்லும்" என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணத்தில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா தொடக்கப் பள்ளியில் 2004ல் நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியாயினர்; 18 குழந்தைகளுக்கு தீ காயங்கள் ஏற்பட்டன.
கருணைத்தொகை
தீ விபத்துக்கு பின் மாநில அரசு ஒரு லட்சம் ரூபாயும், மத்திய அரசு 50 ஆயிரம் ரூபாயும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கின. இதையடுத்து, விபத்தில் பலியான இரண்டு குழந்தைகளின் தந்தையான இன்பராஜ் என்பவர், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "மத்திய, மாநில அரசுகள் வழங்கியது கருணைத் தொகை தான்; நியாயமான இழப்பீட்டை நிர்ணயித்து வழங்கவில்லை. சட்டப்படி இழப்பீடு பெற எங்களுக்கு உரிமை உள்ளது" என, கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன், இழப்பீட்டை நிர்ணயிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகத்தை நியமித்தும், ஆறு மாதங்களில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார். 2012 அக்டோபரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் அப்பீல் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், சத்தியநாராயணன் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்" விசாரித்தது.
ஒரு நபர் கமிஷன்
அரசு தரப்பில் அட்வகேட் - ஜெனரல் சோமயாஜி, "சுப்ரீம் கோர்ட்டில் இதே போல் நிவாரணம் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, உயர்நீதிமன்றத்தில், "ரிட்" மனுவை அனுமதித்து ஒரு நபர் கமிஷன் நியமித்தது சரியல்ல" என்றார்.
இன்பராஜ் சார்பில் வழக்கறிஞர் எஸ்.தமிழரசன், "பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு போதிய இழப்பீட்டை சட்டப்படி வழங்க வேண்டும். பள்ளி நிர்வாகத்தை மட்டுமல்லாமல், அரசு அதிகாரிகளின் அஜாக்கிரதையையும் நீதிபதி சம்பத் கமிஷன் சுட்டிக் காட்டியுள்ளது" என்றார்.
வாதத்தில் அழுத்தம்
மனுவை விசாரித்த டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: சுப்ரீம் கோர்ட்டில் நேரடியாக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தகுதி அடிப்படையில் மனுவை தள்ளுபடி செய்யவில்லை என்ற மனுதாரரின் வாதத்தில் அழுத்தம் உள்ளது. மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட் "அரசியலமைப்பு சட்டப் பிரிவு 32ன் கீழ் மனுவை ஏற்க முகாந்திரம் இல்லை" என, கூறியுள்ளது. இழப்பீடு வழங்குவது குறித்து, எந்த முடிவையும் சுப்ரீம் கோர்ட் தெரிவிக்கவில்லை. இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்று ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது நியாயமானது தான்.
உரிமை உள்ளது
தனி நீதிபதியின் உத்தரவை சட்ட விரோதமானது என கருத முடியாது. விபத்தில் பாதிக்கப்படுபவர்கள், நியாயமான இழப்பீடு பெற உரிமை உள்ளது. இழப்பீட்டு தொகையை நிர்ணயித்த பின் தான், ஏற்கனவே வழங்கப்பட்ட நிவாரணம் நியாயமானது தானா என்ற முடிவுக்கு வர முடியும். தமிழக அரசின் அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நான்கு மாதங்களுக்குள் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும். "ரிட்" மனு மீதான விசாரணையை செப்டம்பர் 15க்கு பட்டியலிட வேண்டும். இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...