தமிழகம் முழுவதும் உள்ள 60 மையங்களில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று தொடங்கியது.
முதல் நாளில் மட்டும் 68 ஆயிரம் விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டது. தமிழகத்தில் சுமார் 8.5 லட்சம் பேர் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான ரிசல்ட் வருகிற 9ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், பி.இ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பம் வினியோகம் நேற்று தொடங்கியது.சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், பிராட்வேயில் உள்ள பாரதி மகளிர் கல்லூரி, புரசைவாக்கத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி, குரோம்பேட்டை எம்ஐடி வளாகம் என மாநிலம் முழுவதும் உள்ள 60 மையங்களிலும் விண்ணப்பம் வினியோகம் நடைபெற்றது. முதல் நாள் என்பதால் எல்லா மையங் களிலும் மாணவமாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பங்களை வாங்கினர். முதல் நாளில் தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டது.
சென்னையில் மட்டும் சுமார் 13,000 விண்ணப்பங்கள் விற்பனையாகின. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விண்ணப்பம் வழங்கப்பட மாட்டாது. இந்த விண்ணப்ப வினியோகம் வருகிற 20ம் தேதி வரை நடக்கிறது. காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். பூர்த்தியான விண்ணப்பங்களை மே 20ம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதன் பிறகு ரேங்க் பட்டியல், கலந்தாய்வு குறித்த விவரம் வெளியிடப்படும் என்று அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதன் மூலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் என 570 கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்து 5 ஆயிரத்து 463 இடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது