சென்னை, சாலிகிராமம் ஜெனரல் கரியப்பா மேல்நிலைப் பள்ளி மாணவர் முருகன். தொழிற்கல்வி படிப்பான பொது இயந்திரவியலை முக்கியப் பாடமாக படித்த இவர், 1200-க்கு 1067 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிக்க விருப்பப்படும் முருகன், போதிய வசதி இல்லாததால், தனது தந்தையுடன் சேர்ந்து சொந்த ஊரில் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். பொருளாதார ரீதியாக யாராவது உதவி செய்தால், தன்னால் மிகச் சிறந்த பொறியாளராக வர முடியும் என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் முருகன்.
இது குறித்து அவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூடப்பட்டு கிராமம் தான் எனக்குச் சொந்த ஊர். எனது தாய், தந்தை இருவருமே விவசாயக் கூலிகள்.
சென்னையில் உள்ள ஜெனரல் கரியப்பா பள்ளியில் கட்டணம் குறைவு என்பதால், விழுப்புரத்திலிருந்து இங்கு வந்து எனது உறவினர் வீட்டில் தங்கி பிளஸ்-2 படித்தேன்.
மிகுந்த சிரமப்பட்டுத்தான் பிளஸ்-2 படித்தேன். எனது சாப்பாட்டு செலவுக்குக் கூட அக்கம் பக்கத்தில் கடன் வாங்கித்தான் எனது தந்தை பணம் அனுப்புவார்.
தேர்வு முடிந்தவுடன் ஊருக்குச் சென்று கடந்த ஒரு மாதமாக நானும் கூலி வேலைக்குச் சென்று வருகிறேன்.
எனக்கு மெக்கானிக்கல் என்ஜீனியராக விருப்பம். ஆனால், போதிய வசதி இல்லாததால் என்னால் படிப்பைத் தொடர முடியுமா? என்று தெரியவில்லை என்றார் முருகன்.
பகுதி நேர வேலை பார்த்து.... அதே பள்ளியில் பயின்ற மற்றொரு மாணவர் திருமுருகவேல், 1200-க்கு 911 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த மாணவர் ஆட்டோ மொபைல் மெக்கானிக்காக பகுதி நேரம் பணியாற்றி விட்டு பிளஸ்-2 பயின்றார்.
திருமுருகவேல் பிளஸ்-2 பயிலும் போது மோட்டார் வாகனங்களுக்கான பேட்டரியை சார்ஜ் செய்யும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். இதற்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பில் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருது வழங்கப்பட்டது.
ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங் பயில விருப்பப்படும் இவர், மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இது குறித்து திருமுருகவேல் கூறுகையில், எனது தந்தை ஆட்டோ ஓட்டுநர், அம்மா கூலித் தொழிலாளி. எனக்கு சிறுவயதில் இருந்தே ஆட்டோ மொபைல் துறை மீது ஈடுபாடு அதிகம். ஆனால், எனது வீட்டின் நிலைமை காரணமாக என்னால் முழு அளவில் கவனம் செலுத்தி படிக்க முடியவில்லை. பகுதி நேரம் வேலைக்கு சென்று விட்டு மீதி நேரத்தில் தான் படிப்பேன்.
தற்போது உயர்கல்வி கற்க வசதி இல்லாததால், முழு நேரமும் வேலை செய்ய வந்து விட்டேன் என்றார்