அரசுடமை ஆக்கப்பட்டுள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு இந்த ஆண்டும் தனி
கவுன்சலிங் முறையில்தான்
மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள
நிலையில் அது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் பல கேள்விகள்
எழுப்பப்பட்டுள்ளன.
நிதிச்சிக்கல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளில் சிக்கித் தவித்த அண்ணாமலைப்
பல்கலைக் கழகத்தை அதன் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசே ஏற்று
நடத்தி வருகிறது.
அரசுடமை ஆக்கப்பட்டு ஓராண்டுக் கும் மேல் ஆகிவிட்ட நிலையில் இந்த ஆண்டு
மாணவர் சேர்க்கை எப்படி இருக்கும் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவிவந்தது.
அதற்கு காரணம் மாநிலத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு
கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண்மை கல்லூரி கள்
முழுவதற்கும் மாநில அரசின் சார்பில் பொதுவான விண்ணப்பங்கள் பெறப்பட்டு
அதில் மதிப்பெண் மற்றும் இட இதுக்கீட்டு முறைப்படி கல்லூரிகளில் ஒற்றைச்
சாளர முறை யில் இடங்கள் நிரப்பப் படுகின்றன.
அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் அரசின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதால் இந்த
ஆண்டு தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக் கழகம் மற்றும்
வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மூலமாகவே ஒற்றைச் சாளர முறையில் அதன்
இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என மாணவர்களும் பெற்றோரும் எதிர்பார்த்தி
ருந்தனர். ஆனால் தனியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதன் மூலம்தான்
நிரப்பப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
இதுகுறித்து அதன் ஊழியர் சங்கப் பிரதிநிதி ஒருவர் ‘தி இந்து’விடம்
பேசினார். “ஏற்கெனவே நிதிச் சிக்கலில் இருக்கும் பல்கலைக்கழகம் அரசு
கவுன்சலிங் முறையில் மாணவர் சேர்க்கையை நடத்திவிட்டால் இன்னும் மோசமான
நிலைக்கு போய்விடும். அங்கிருந்து ஒதுக்கப்படும் குறைந்த மாணவர் எண்ணிக்கை
மற்றும் கல்விக் கட்டணம் ஆகியவற்றைக் கொண்டு நிர்வாகத்தை நடத்த முடியாது.
அரசுடமை ஆவதற்கு முன்பு 5000 பேர் வரை சேர்க்கப்பட்டனர். கடந்த ஆண்டு 2500
பேர் சேர்க்கப்பட்டனர். மருத்துவக் கல்லூரியிலும் மதிப்பெண் அடிப்படையில்
மட்டும்தான் மாணவர் கள் சேர்க்கப்படுவார்கள்.
ஆனால் கல்விக் கட்டணம் ஐந்து லட்ச ரூபாய்க்கும் மேல் கட்டவேண் டும். இப்படி
ஒருசில ஆண்டுகளுக் காவது அதிக எண்ணிக்கையில் மாணவர்களைச் சேர்த்தும்,
கட்டணம் வசூலித்தும் நிதி நிலைமையை சீரடையச் செய்யும்வரை இங்கு மாணவர்
சேர்க்கைக்கு தனி கவுன்சலிங் நடத்துவதுதான் சரியானது” என்கிறார்.
இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி ஷிவதாஸ் மீனாவிடம் பேசியபோது,
“ஒற்றைச் சாளர முறை இங்கு அவசியம் இல்லை. இந்த பல்கலைக்கென்று தனியான
நுழைவுத் தேர்வுகள் எதுவும் நடத்தாமல் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களில் அதிக
மதிப்பெண்கள் மற்றும் அரசின் ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றிதான் மாணவர்
சேர்க்கை நடைபெறும். இதில் குழப்பமோ, தவறோ நடப் பதற்கு வாய்ப்பில்லை”
என்றார்.
ஆனால் பல்கலை நலனில் அக்கறை உள்ள சிலரின் பார்வையும் கவலையும் வேறாக
இருக்கிறது. “பல்கலைக் கழகத் துக்கு துணைவேந்தர் நியமிக்கப்பட இருக்கிறார்.
அவர் பதவியேற்று நிர்வாகத்தை நடத்தும்போது செனட் மற்றும் சிண்டிகேட்
ஆகியவற்றின் தீர்மானங்களைப் பெற்று பல்கலைக்கழகத்துக்கு முன்பிருந்தது
போன்று நுழைவுத் தேர்வு முறையையோ அல்லது வேறு ஏதேனும் முறையையோ கொண்டு
வந்துவிட வாய்ப்பு ஏற்படும். அதனால் ஒற்றைச் சாளர முறையை இப்போதே
பின்பற்றினால்தான் அது எதிர்காலத்துக்கும் நல்லது” என்கிறார்கள். இதில்
உள்ள நியாயம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதுதான்.