கணவரை இழந்த பெண்களை இன்னும் கூட இந்த சமூகம், புழக்கடை பொரு ளாய்த் தான்
பார்க்கிறது. ஆனால், அந்தப் பெண்களுக்கு கலங்கரை விளக்கமாய் வாழ்வாதாரமாய்
நிற்கிறது ‘வெளிச்சம்’.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் ‘பசுமை இயற்கை விவசாயி கள்
சங்கம்’ என்ற அமைப்பு இருக்கிறது. இதில் மொத்தம் 94 உறுப்பினர்கள்
இருக்கிறார்கள். இவர்களில் 60 பேர், கணவரை இழந்த பெண்கள். எஞ்சியவர் கள்
கணவரால் கைவிடப்பட்டவர்கள். இவர்கள் 18 வயதிலிருந்து 55 வயதுக்கு
உட்பட்டவர்கள். இவர்கள் எப்படி சங்கமாய் ஒன்றிணைந்தார்கள்?
இதுகுறித்து பதில் சொல்கிறார் ’வெளிச்சம்’ நிர்வாக இயக்குநர் வேலன்..
“இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் சீடன் நான். அந்த அனுப வத்தை வைத்து
2000-ல் ‘வெளிச்சம்’ அமைப்பை தொடங்கினோம். கிராமப்புற ஏழைகளுக்காக
வயல்வெளி பள்ளிகள் நடத்தி இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்துவதுதான் எங்களது
பணி. 2007-ல் ஸ்வீடனில் இருந்து படிக்க வந்திருந்த இரண்டு மாணவர் கள்,
‘இந்த சமூகத்தால் ஒதுக்கிவைக்கப் பட்ட, கணவரால் கைவிடப்பட்ட பெண் களுக்கும்
கணவரை இழந்த பெண் களுக்கும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று
கேள்வியை எழுப்பிவிட்டுப் போய்விட்டார்கள்.
அதில் நியாயம் இருந்ததால், நாங்கள் பணிசெய்த குன்னாண்டார் கோயில் ஒன்றியம்
பகுதியில் உள்ள கிராமங்களில் கணவரால் கைவிடப்பட்ட, கணவரை இழந்த பெண்களைப்
பற்றி சர்வே எடுத்தோம். கோட்ரப்பட்டி கிராமத்தில் கணவரை இழந்த பெண்கள் 15
பேர் இருந்தார்கள். அவர்களை ஒருங்கிணைத்து ஒரு குழுவாக அமைத்தோம்.
அவர்களுக்கு 15 ஆயிரம் வருட குத்தகையில் இரண்டு ஏக்கர் மானாவாரி நிலத்தை
குத்தகைக்கு எடுத்துக் கொடுத்து அதில் பயிரிடுவதற்கு சிறுதானிய விதைகளையும்
வாங்கிக் கொடுத்தோம்.
சந்தோஷத்துடன் நிலத்தில் கால்பதித்த அந்தப் பெண்கள் தங்களது உழைப்பைக்
கொட்டினார்கள். முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தால் மூன்றே மாதத்தில் பலன்
கிடைத்தது. கிடைத்த வருமானத்தை அவர்கள் தங்களுக்குள் பங்கிட்டுக்
கொண்டதுடன் அடுத்த பருவத்துக்கான விதைகளையும் பத்திரப்படுத்திக்
கொண்டார்கள். இதன்மூலம் அவர்களுக்கு அதிகபட்சம் 60 நாட்களுக்கு உணவு
உத்தரவாதமும் கிடைத்தது.
இதையறிந்த பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த ஆதரவற்ற பெண்களும் ஆர்வத்துடன்
வந்தார்கள். அவர்களுக்கும் பயிற்சி கொடுத்து 12 பேர் கொண்ட குழுக்களாக
பிரித்து இயற்கை விவசாயம் செய்ய வைத்தோம். இயற்கை உரம் தயாரிப்பதற்கு
மாட்டுச் சாணம் தேவை என்பதால் குழுக்களில் சிலருக்கு மாட்டு லோனும்
வாங்கிக் கொடுத்தோம்.
கணவரை இழந்த பெண்கள் பிழைக்க வழி தெரியாமல் எஸ்டேட் வேலைக்கும் சித்தாள்
வேலைக்கும் வெளியூர்களுக்கும் போய்விடுவதால் அவர்களது பிள்ளைகளை படிக்க
வைக்க முடியாத நிலை இருந்தது. இப்போது, சொந்த ஊரிலேயே அவர்கள் விவசாயம்
செய்வதால் அருகிலிருந்து பிள்ளைகளை கவனிக்க முடிகிறது; அவர்களை படிக்க
வைக்கவும் முடிகிறது. அத்தனை பேருமே ஏதாவது ஒருவகையில் நிம்மதியை
தொலைத்தவர்கள் என்பதால் ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசி ஆறுதலாகவும்
இருக்கிறார்கள்.
இந்தக் குழுக்களில் கணவரை இழந்த பெண்கள் 94 பேர் இருக்கிறார்கள். இவர்களின்
உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக கீரனூரில் கடை ஒன்றை
வாடகைக்கு பிடித்திருக்கிறோம்.
இனி, இவர்களின் இயற்கை விவசாயத்தில் விளைந்த திணை, கம்பு, சோளம், கேழ்வரகு,
கடலை, துவரை உள்ளிட்ட தானியங்கள் இந்தக் கடையில் கிடைக்கும்.
அடுத்தகட்டமாக, ஒரு குழுவுக்கு ஐந்து அல்லது பத்து ஏக்கர் நிலத்தை நீண்டகால
குத்தகைக்கு எடுத்துக் கொடுத்து அதில் போர்வெல் அமைத்து காய்கனி தோட்டம்
அமைப்பதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறோம்’ என்கிறார் வேலன்