இந்தியாவில் குழந்தைகளுக்கான உலகம் எப்படிப்பட்டது...? --ஓர் அதிர்ச்சி தகவல்

அம்மா, அப்பா, அத்தை, மாமா, பாட்டி, தாத்தா... என உறவுச்சூழலில் வளரும் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை, குடும்ப உறவுகளின் மூலம் உறுதி செய்யலாம். குடும்பத்திற்கு மாற்று என்பது, தத்தெடுப்பின் மூலம் மற்றொரு குடும்பத்துடன் குழந்தையை இணைப்பதுதான். யாருமில்லாத, அனாதரவான நிலையில் உள்ள குழந்தைகளின் கடைசிப் புகலிடம் தான் தொண்டு நிறுவனங்களின் கீழ் நடத்தப்படும் இல்லங்கள். இந்தியாவில் 1986 வரையில், குழந்தைகளின் மீதான பரிதாப பார்வைதான்
இருந்தது. 1989ல் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தை உரிமைகள் மீதான உடன்படிக்கை ஏற்பட்டது. மூன்றாண்டுகள் கழித்துதான், இந்தியா அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. உடன்படிக்கையில் கையெழுத்திட்டாலும், இளம்பருவத்தில் தவறு செய்தவர்களையும், தவறால் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே பார்வையின் கீழ்தான் பார்த்து வந்தோம். 2000ம் ஆண்டில் இளம் சிறார் நீதிச்சட்டம் வந்தபின் தான், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனிப் புகலிடம் கிடைத்தது. தவறு செய்தவர்கள் கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்பப்பட்டனர். தவறிழைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள், தொண்டு நிறுவன இல்லங்களில் சேர்க்கப்பட்டனர். உரிமைக்குரல்: குழந்தை பாதுகாப்பு என்பது உரிமை என்ற கண்ணோட்டம் 2000ம் ஆண்டுக்கு பின் ஏற்பட ஆரம்பித்தது. குழந்தை உரிமையும் மனித உரிமையே என்ற தாக்கம் எல்லோர் மனதிலும் ஏற்படுத்தப்பட்டது. குழந்தைகள் வாழ்வாதாரத்திற்கான உரிமை, உயிர்வாழ்வதற்கான உரிமை, வளர்ச்சி, முன்னேற்றத்திற்கான உரிமை, பாதுகாப்பு, பராமரிப்புக்கான உரிமைகளைத் தரவேண்டியது அவசியமாகிவிட்டது. குழந்தை கருத்தை கேட்டு முடிவெடுக்கும் உரிமை வலுவானதும், இதன்பின்தான். குழந்தை இல்லங்களில் அமைக்கப்பட்ட மேலாண் குழுவில் வயது வாரியாக மூன்று பிரிவுகளின் கீழ், குழந்தைப் பிரதிநிதிகள் சேர்க்கப்பட்டதும், இதன்பின்தான். தங்களது தேவை, பிரச்னைகளை சொல்வதற்கு வகை செய்யப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மத்திய அமைச்சகத்தின் கீழ் இந்திய குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் ஏற்படுத்தப்பட்டது. அவற்றின் கீழ், மாநில அளவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ், ஒவ்வொரு அலகு அமைக்கப்பட்டது. இந்த அலகுகளின் கீழ் குழந்தை இல்லங்கள் கண்காணிக்கப்படுகின்றன. குழந்தை இல்லங்கள் மூன்று வகையாக பார்க்கப்படுகிறது. இளம்சிறார் நீதிச்சட்டத்தின் கீழ் அரசு மூலம் நேரடியாக இயங்கக்கூடிய இல்லங்கள். பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள், கடத்தலில் மீட்கப்பட்ட, காணாமல் போன, வன்முறைக்கு ஆளான குழந்தைகள் இங்கு தங்கவைக்கப்படுவர். மதுரையில் முத்துப்பட்டியில் உள்ள சக்தி விடியல் வரவேற்பறை இல்லம், அதற்கான பணியை செய்து வருகிறது. இங்கு வரும் குழந்தைகளை நான்கு மாதங்களுக்குள் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். அதிகபட்சம் ஆறுமாதத்திற்குள் பெற்றோரிடம் அல்லது வேறு இல்லத்திடம் ஒப்படைக்க வேண்டும். இரண்டாவது வகை, சான்றளிக்கப்பட்ட இல்லங்கள். இதுவும் தற்காலிக புகலிடம்தான். மதுரையில் அரசின் நேரடி பார்வையில் பாங்க் காலனியில் மாணவர் பிற்காப்பு நிறுவனம் உள்ளது. இங்கு 18 முதல் 21 வயதுள்ளவர்கள் தங்கவைக்கப்படுவர். மூன்றாவது வகை பதிவுபெற்ற குழந்தை இல்லங்கள். இவற்றை தொண்டுநிறுவனங்கள் நடத்துகின்றன. இங்கு தான் குழந்தைகளின் பராமரிப்பும், பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால் இல்லங்களை நடத்துவதற்கு தேவையான இடவசதி, பாதுகாப்பு வசதி ஆகியவற்றை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். நிறைய இல்லங்கள் குறைந்தபட்ச விதிமுறைகளை கூட கடைப்பிடிப்பதில்லை என்பது தான் வேதனையான விஷயம். அதைவிட வேதனையான விஷயம்... பெற்றோர் உள்ள குழந்தைகள்தான், இல்லங்களில் வளர்கின்றன. அப்பா, அம்மாவுடன் வளரவேண்டும். இருவரில் யாராவது இல்லாவிட்டால் ஒற்றை பெற்றோருடன் வளர வேண்டும். இருவருமே இல்லாவிட்டால் அத்தை, மாமா அல்லது பாட்டி, தாத்தா பராமரிப்பில் வளரவேண்டும். அப்போதுதான் குழந்தைகளின் வளர்ச்சி இயல்பாக இருக்கும். இல்லங்களில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை முழுமையாக உறுதிசெய்ய இயலாது என, வெளிநாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் வறுமையை காரணம் காட்டி பெரும்பாலான பெற்றோர், தங்கள் பொறுப்பை உதறிவிட்டு இல்லங்களில் சேர்க்கின்றனர். தற்போது தமிழகத்தில் வறுமை என்பதன் இலக்கணமே மாறிவிட்டது. மழலைப் பருவத்தில் அங்கன்வாடியில் இலவச உணவு, ஒன்று முதல் பிளஸ் 2 வரை இலவச உணவு, கல்வி, சீருடை, புத்தகம் என அனைத்தையும் அரசு வழங்குகிறது. பின் பெற்றோருக்கு எந்த விதத்தில் பாரம் என்று, வறுமையை காரணம் காட்டி பிள்ளைகளை, வீட்டிலிருந்து பிரித்து இல்லத்தில் சேர்க்கின்றனர். இத்தகைய தவறான பெற்றோர்களால் தான், பதிவுபெறாத, குழந்தைகளை பராமரிக்காத இல்லங்கள் நிறைய உருவாகின்றன. தாய் அல்லது தந்தை இல்லாத பெற்றோரிடம் வளரும் குழந்தைகளை இல்லத்தில் சேர்ப்பதையே முக்கிய விஷயமாக நினைக்கின்றனர். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்... வீட்டில் பாதுகாப்பு இல்லை என்பதுதான். வீட்டில் பாதுகாப்பு இல்லை என்று இல்லத்திற்கு அனுப்பும் பெற்றோருக்கு, இல்லத்தில் மட்டும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று யார் உறுதி கொடுத்தது? இல்லத்தில் தங்களை விட மூத்த பிள்ளைகளால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்படலாம். ஆணும், பெண்ணும் ஒரே அறையில் அடைத்து வைக்கும்போது, அவர்களின் சுயமதிப்பீடு பாதிக்கப்படலாம். இல்லங்களில் வளரும், பெற்றோர் உள்ள குழந்தைகள் மீண்டும் பெற்றோரிடமே ஒப்படைக்க வேண்டும். அதன்பின் படிப்படியாக இல்லங்களின் எண்ணிக்கை குறைய வேண்டும். உண்மையிலேயே நிராதரவான பிள்ளைகளுக்காக சில இல்லங்கள் மட்டும் இருந்தால் போதும். பெற்றோர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து, குழந்தைகளை வீட்டில் வளர்க்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கான உரிமைகள் முழுதாக கிடைக்கும். அவர்களின் வளர்ச்சியும் சரியாக இருக்கும். இப்படி வளரவேண்டும் என்பது, குழந்தைகளின் அடிப்படை உரிமையும் கூட. நிறுத்தப்பட்ட குழந்தை திருமணம்: மதுரை மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தின் புள்ளி விவரப்படி, ஜன., 2013 முதல் டிச., வரை, 23 குழந்தைகளின் குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் இரு சிறுவர்கள் உரிய வயதை அடையாதவர்கள். இந்தாண்டு ஜூலை வரை 17 சிறுமிகளின் குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒன்றரை ஆண்டுகளில் 25 பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். 56 பேர் கைவிடப்பட்டவர்களாக உள்ளனர். காணாமல் போனவர்கள் 19 பேர். மனதாலும், உடலாலும் காயம்பட்டவர்கள் 63 பேர். பிச்சை எடுப்பதில் இருந்து மீட்கப்பட்டவர்கள் 24 பேர். குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள் 53பேர். வீட்டை விட்டு ஓடிவந்தவர்கள் 126 பேர். கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்கள் 8 பேர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...