பல்கலைக்கழகங்களில் ஹிந்தி திணிப்பை ஏற்க முடியாது: ஜெயலலிதா

பல்கலைக்கழகங்களில் ஹிந்தி திணிப்பை ஏற்க முடியாது; ஆங்கிலத்தைப் போல ஹிந்தியையும் முதன்மைப் பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவு, தமிழக பல்கலைக்கழகங்களைக்
கட்டுப்படுத்தாது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

பல்கலைக்கழக மானியக் குழுவின் சுற்றறிக்கை அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு மட்டும் கடந்த 16-ஆம் தேதியன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்தச் சுற்றறிக்கையைப் படித்துப் பார்க்கும்போது, அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் செயல் அமைப்பான கேந்திரிய ஹிந்தி சமிதியின் 30-ஆவது கூட்டம் கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூலை 28-ஆம் தேதியன்று அன்றைய பிரதமர் தலைமையில் நடைபெற்றதும், அந்தக் கூட்ட நடவடிக்கை குறிப்பின்படி, பட்டப் படிப்பில் ஆங்கிலத்துடன் ஹிந்தி மொழியும் ஒரு முதன்மைப் பாடமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும்; சட்டம்-வணிகவியல் பட்டப் படிப்பு பயில்வோருக்கு கட்டாயமாக ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும் என்று இருப்பது போல், ஹிந்தியும் கற்பிக்கப்பட வேண்டும் என்பதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்கள் குறித்த அறிக்கையை பல்கலைக்கழகங்களிடம், பல்கலைக்கழக மானியக் குழு கோரியுள்ளதும் தெரிய வருகிறது.

கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில், குஜராத் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் ஆங்கிலம் அல்லது ஹிந்தி படித்து பட்டம் பெறுகின்றனர் என்றும், இதன் காரணமாக மத்திய அரசு அலுவலகங்களின் செயல்பாட்டுக்குத் தேவையான

மொழிபெயர்க்கும் திறன் அவர்களுக்கு ஏற்படாது என்றும் தெரிவித்து குஜராத்தில் பயிலும் மாணவ, மாணவியர் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளையும் படிப்பதை பல்கலைக்கழக மானியக் குழு உறுதி செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து, ஹிந்தி மொழி திணிக்கும் முயற்சிக்கு அடிப்படைக் காரணம், அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் செயல் அமைப்பான கேந்திரிய ஹிந்தி சமிதி கடந்த 2011-ஆம் ஆண்டு எடுத்த முடிவுகள்தான் என்பது தெரிய வருகிறது. அப்போது மத்தியிலே ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கூட்டணி அரசு.

அந்தக் கூட்டணி அரசிலே அங்கம் வகித்த கட்சி திமுக. இப்படிப்பட்ட ஒரு முடிவை முந்தைய மத்திய அரசு எடுத்தபோது வாய் திறக்காத திமுக தலைவர் கருணாநிதி, அவரது கட்சியைச் சேர்ந்த டி.கே.எஸ். இளங்கோவன் மூலம் பெயரளவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

ஹிந்தி திணிப்பு கூடாது: அதிமுகவைப் பொருத்தவரையில், ஹிந்தி பேசாத மாநில மக்கள் மீது ஹிந்தி மொழி திணிக்கப்படக் கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும் உறுதியாக உள்ளது.

1976-ஆம் ஆண்டைய அலுவல் மொழிகள் விதிகளின்படி, குஜராத், மகாராஷ்டிரம், பஞ்சாப் மாநிலங்கள், சண்டீகர், டாமன், டையூ, தாத்ரா-நகர்ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்கள் மண்டலம் "பி' என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளன. மண்டலம் "பி'-இன் கீழ் வரும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடனான மத்திய அரசின் தகவல் பரிமாற்றம் சாதாரணமாக ஹிந்தி மொழியில் இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டால் அத்துடன் ஹிந்தி மொழி பெயர்ப்பும் அனுப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் மண்டலம் "சி' என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளன. மண்டலம் "சி'-இன் கீழ் வரும் மாநிலங்களுடனான தகவல் பரிமாற்றம் ஆங்கிலத்தில் மட்டுமே இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்தச் சுற்றறிக்கை அறவே பொருந்தாது. தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

இந்தச் சூழ்நிலையில் ஆங்கிலத்துடன் ஹிந்தியையும் முதன்மைப் பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் சட்டம், வணிகவியல் பட்டப் படிப்புகளில் ஆங்கிலம் கற்பிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது போல், ஹிந்தியும் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக்கொள்வது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று என்பதுடன், சட்டத்துக்கும் புறம்பானது.

தமிழகத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் அல்லது இதர மொழிகள் முதல் பகுதியாகவும், ஆங்கிலம் இரண்டாம் பகுதியாகவும், சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகள் மூன்றாம் பகுதியாகவும் தொடர்ந்து இருக்கும். கடந்த 2011-ஆம் ஆண்டில் நடைபெற்ற கேந்திரிய ஹிந்தி சமிதி கூட்ட முடிவுகள் தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்தாது என்று பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு தெரிவிக்குமாறு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அறிவுரை வழங்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.



சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றது பல்கலைக்கழக மானியக் குழு



தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகக் கட்சிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து, "பட்டப் படிப்பில் ஆங்கிலத்தைப் போல் ஹிந்தியையும் முதன்மைப் பாடமாகக் கற்பிக்க வேண்டும்' என்ற சுற்றறிக்கையைத் திரும்பப் பெற பல்கலைக்கழக மானியக் குழு வியாழக்கிழமை முடிவு செய்தது.

இது குறித்து பல்கலைக் கழக மானியக் குழுவின் தலைவர் வேத் பிரகாஷ் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பட்டப் படிப்பில் ஆங்கிலத்தைப் போல் ஹிந்தியையும் முதன்மைப் பாடமாகக் கற்பிக்க வேண்டும்' என்ற சுற்றறிக்கைக்கு பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் இதைத் திரும்பப் பெறுவதற்கான சுற்றறிக்கையானது அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதிய சில மணி நேரத்துக்குள், சுற்றறிக்கையை திரும்பப் பெறும் அறிவிப்பை பல்கலைக் கழக மானியக் குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...