உலகின் உற்பத்தி மையமாக இந்தியா: பிரதமர் மோடி உறுதி

""இந்தியாவில் உற்பத்தி என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவோம். எளிமையான, நன்மை பயக்கக்கூடிய சிறப்பான நிர்வாகத்தை வழங்குவதே மத்திய அரசின்
நோக்கமாகும்'' என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடக் கூறினார்.

வெளிநாடுகளைச் சேர்ந்த உற்பத்தி நிறுவனங்களை இந்தியாவுக்கு வசீகரிக்கும் நோக்கமான "இந்தியாவில் உற்பத்தி' என்ற திட்டத்தை தில்லியில் வியாழக்கிழமை தொடங்கிவைத்து பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் டாடா தொழில் குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்திரி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, விப்ரோ நிறுவனத் தலைவர் அஸீம் பிரேம்ஜி, ஐசிஐசிஐ வங்கித் தலைமைச் செயல் அலுவலரும் நிர்வாக இயக்குநருமான சந்தா கோச்சார், லாக்ஹீட் மார்ட்டின் தலைமைச் செயல் அலுவலர் ஃபில் ஷா, ஐடிசி நிறுவனத் தலைவர் ஒய்.சி.தேவேஸ்வர் உள்ளிட்ட இந்திய, சர்வதேச முன்னணி வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:

"இந்தியாவில் உற்பத்தி' என்பது வெறும் முழக்கமோ வெளிநாட்டு நிறுவனங்களுக்கான அழைப்போ அல்ல. அரசியல் காரணங்களும் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு உந்துதல் அளிப்பதே இதன் நோக்கமாகும்.

தொழில் தொடங்கும் வாய்ப்புக்காக கீழை நாடுகளை நாடுங்கள் என்பார்கள்; உற்பத்தி செய்த பொருள்களை உலகளாவிய சந்தைப்படுத்துதலுக்காக மேலை நாடுகளை நாடுவோம் என்பேன். இந்த இரண்டின் இணைப்புதான் இந்தப் பெயர்.

ஆசியக் கண்டத்தில் காலூன்ற வாய்ப்புக் கிடைக்குமா என்று பன்னாட்டு நிறுவனங்கள் ஏங்குகின்றன. பலதரப்பட்ட இனத்தினர் வாழும் இந்தியர்களின் வர்த்தகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வாய்ப்புகள் ஏராளமாக இங்கு கொட்டிக் கிடக்கின்றன என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். ஆசியக் கண்டத்தில் இந்தியாவில்தான் சிறப்பான மக்களாட்சி நடைபெறுகிறது.

நிலைமை மாறிவிட்டது: "இந்தியாவில் உற்பத்தி' என்ற இந்தத் திட்டத்தின் மூலம் நமது நாடும், இங்கு முதலீடு செய்யும் நிறுவனங்களும் வளம்பெறும். முந்தைய ஆட்சிக் காலத்தின்போது இங்கு தொழில் செய்து வந்த நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை எடுத்துக் கொண்டு வேறு நாடுகளுக்குச் செல்லலாமா என்று யோசித்து கொண்டிருந்த நிலை தற்போது இல்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த 100 நாள்களுக்குள் நிலைமை மாறிவிட்டது. இந்த அரசின் எளிமையான நிர்வாகம், முதலீட்டாளர்களைக் கவர்ந்து விட்டது.

இந்தியாவுக்கு "ஹைவே'க்களும் (நெடுஞ்சாலைகளும்) தேவை; "ஐ-வே'க்களும் (டிஜிட்டல் நிர்வாகம்) தேவை. எனவே, அரசின் தொழில் கொள்கைகள் பற்றிய சந்தேகங்களை உடனுக்குடன் தெளிவுபடுத்திக் கொள்ளும் வகையில் "இந்தியாவில் உற்பத்தி' திட்டத்தின் கீழ் இணைய தளத் தொடர்பு மூலமான வசதி செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி அலகு அபரிமிதமாக உயரும். உலகின் தொழில், வர்த்தக, உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும். கார்கள் முதல் கணினி வரை, செயற்கைக்கோள்கள் முதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் வரை, காகிதம் முதல் மின் உற்பத்தி வரை எது வேண்டுமானாலும் இங்கு தயாரிக்கும் வகையில் இந்தியாவை டிஜிட்டல்மயமாக்குவோம். தொழில் துறையில் உலக அளவில் இனி சிங்கம்போல் வீறு நடை போடுவோம் என்றார் மோடி.

தொழிலாளர்கள் சட்டங்களில் திருத்தம்: இதைத் தொடர்ந்து மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: தொழில் நிறுவனங்களில் ஊழியர்களின் பணி நேரத்தைத் தேவைக்கு ஏற்ப மாற்றியமைப்பது உள்பட தொழிலாளர் நலச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு நிர்வாகத்தைப் பொருத்தவரை, இந்தியா என்றாலே சிவப்பு நாடா கலாசாரம் (காலதாமதம்), இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியம் (தேவையற்ற கட்டுப்பாடு), சிக்கலான அரசுக் கொள்கைகள் என்ற நினைப்புதான் உலக அளவில் நெடுங்காலமாக நிலவி வருகிறது. அதை இந்த அரசு மாற்றும். உரிமம் வழங்கும் முறை, தரக் கட்டுப்பாட்டு விதிகள் ஆகியவற்றைத் தளர்த்துவோம். "இந்தியாவில் உற்பத்தி' திட்டத்தின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி அளவில் 25 சதவீதப் பங்களிப்பை அளிப்போம் என்றார் நிர்மலா சீதாராமன்.

தொழிலதிபர்கள்: முகேஷ் அம்பானி பேசியதாவது: நாடு முழுவதும் சீரான சரக்கு, சேவை வரி என்ற மதிப்புக் கூட்டு வரியை அமல்படுத்துவதன் மூலம் இந்தியாவை முதன்மைச் சந்தையாக மாற்றுவதுடன், இந்தியாவில் உற்பத்தி திட்டத்துக்கும் வலு சேர்க்கும். அடுத்த 15 மாதங்களுக்குள் ரிலையன்ஸ் நிறுவனம் சுமார் ஒன்றேகால் லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் என்றார்.

சைரஸ் மிஸ்திரி பேசுகையில், இந்தியாவில் முழுவீச்சில் முதலீடு செய்வதற்கு டாடா நிறுவனம் தயாராக உள்ளது என்றார்.

சந்தா கோச்சார் பேசுகையில், மிகுதியான உற்பத்தித் திறனை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் பொருளாதார நிலைமை சீராகும் என்றார்.

ஃபில் ஷா பேசுகையில், புதுமையின் கேந்திரமாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதற்கு எங்களது நிறுவனம் ஆவலுடன் உள்ளது என்றார்.

தேவேஸ்வர் பேசுகையில், உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் பணவீக்கத்தையும், வேலைவாய்ப்பின்மை பிரச்னையையும் தீர்க்க முடியும். எங்களது நிறுவனத்தின் அடுத்தகட்ட முதலீட்டை மத்தியப்பிரதேச மாநிலத்தில் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...