அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிந்துவரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது.
இவர்களுடைய பணி நியமனத்துக்கு அரசு இன்னும் அனுமதி அளிக்காததால், அவர்களுக்கு ஊதியம் கிடைக்குமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக பேராசிரியர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், ரூ.10 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனர்.
அரசுக் கல்லூரிகளில் முதல் ஷிஃப்ட், 2-ஆவது ஷிஃப்ட் என்ற இரு பிரிவுகளாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், முதல் ஷிஃப்ட்டில் 1,331 கௌரவ விரிவுரையாளர்களும், 2-ஆவது ஷிஃப்ட்டில் 1,550 கௌரவ விரிவுரையாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
முதல் ஷிஃப்ட் பணியிடங்கள் அனைத்தும் அரசு ஒப்புதலளித்த இடங்களாகும். 2-ஆவது ஷிஃப்ட் பணியிடங்கள் அரசு ஒப்புதல் அளிக்காத, சுயநிதி பாடப்பிரிவு பணியிடங்களாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் 11 மாதங்களுக்கு மட்டும் இவர்கள் பணியில் அமர்த்திக்கொள்ளப்படுவர். பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு, அடுத்த ஆண்டுக்குப் புதிதாக நியமனம் செய்துகொள்ளப்படுவர்.
கல்லூரிகளின் நிர்வாகம், அரசு அனுமதி வழங்கிய எண்ணிக்கையில் தாங்களாகவே அவர்களை நியமித்துக்கொண்டு, அதன் பிறகு அவர்களின் நியமனத்துக்கான ஒப்புதலை அரசிடம் பெற்று ஊதியத்துக்கான நிதி ஒதுக்கீட்டையும் பெற்றுக்கொள்வது வழக்கம். இந்த நிலையில், கல்லூரிகளில் முதல் ஷிஃப்ட்டில் பணிபுரியும் 1,331 கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்கின்றனர் பேராசிரியர்கள்.
இதுகுறித்து, அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் கூறியது:
கௌரவ விரிவுரையாளர்கள், நிரந்தப் பேராசிரியர்களுக்கு இணையான பணிகளைச் செய்தபோதும், அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் என்ற அளவில் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. அவர்களில் பலர், இந்தக் குறைந்த சம்பளத்தை வைத்தே குடும்பத்தைப் பராமரித்து வருகின்றனர்.
வேலூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழிகாட்டுதலின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட வேண்டும். மேலும் அவர்களின் நியமனம் முறைப்படுத்தப்பட வேண்டும் என அந்த வழக்கில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு காரணமாக, முதல் ஷிஃப்ட்டில் பணியாற்றும் 1,331 கௌரவ விரிவுரையாளர்களின் நியமனத்துக்கு அரசின் அனுமதி கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஜூன் மாதம் முதல் இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.
இதற்கிடையே, அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,093 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு உதவிப் பேராசிரியர்களை பணியில் அமர்த்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டுவிட்டால், முதல் ஷிஃப்ட் கௌரவ விரிவுரையாளர்கள் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதியாகிவிடும்.
எனவே, கௌரவ விரிவுரையாளர்கள் நியமனத்துக்கு உடனடியாக அனுமதி அளித்து, அவர்கள் இதுவரை பணியாற்றிய மாதங்களுக்கு ஊதியம் கிடைக்க அரசு வழி செய்யவேண்டும் என்றனர்.