முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது !!

முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களுக்கான பாதுகாப்புத் திட்டங்களை நாம் முன்கூட்டியே வகுப்பது அவசியம் என ஆளுநர் கே. ரோசய்யா கூறினார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மூத்த குடிமக்களுக்கான
அமைப்பு, சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.) ஆகியவை சார்பில் முதியோர் தினவிழா கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் ஆளுநர் ரோசய்யா பேசியது: இந்தியாவில் கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

பல்வேறு காரணங்களால் பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தனிமையில் அவர்கள் அடையும் வேதனைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதை மாற்ற வேண்டிய பொறுப்பும், அவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் இளைய சமுதாயத்துக்கு உள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் வரும் 2050-ஆம் ஆண்டு கால இடைவெளியில் இந்தியாவில் 50 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 34 சதவீதமாக இருக்கும் எனவும், 65 வயதுக்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 5 முதல் 14 சதவீதமாக இருக்கும் எனவும் ஐ.நா. மக்கள் தொகைப் பிரிவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதேபோல் 80 வயதைத் தாண்டியவர்களின் எண்ணிக்கை 1 முதல் 3 சதவீதம் வரை உயரும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கேற்றவாறு முதியோர்களின் உடல்நலம், மன அமைதி, பாதுகாப்பு குறித்த திட்டங்களை முன்கூட்டியே வகுப்பது அவசியம்.

தமிழகத்தில் முதியோர்களின் வாழ்க்கைத்தரம், பொருளாதாரச் சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுவது பாராட்டுக்குரியதாகும்.

இளமையில் நாம் கற்ற கல்வி முதுமையில் இன்னல்கள் ஏற்படாமல் நம்மைக் காக்கிறது.

முதுமையில் "அறிவே நமக்கு உணவு' என்பதைப் புரிந்து கொண்டால் முதுமையின்போது வறுமையை எதிர்கொள்ளாதவாறு சிறு வயதில் நாம் நடந்து கொள்வோம் என அறிஞர் லியானார்டோ டாவின்சி கூறியுள்ளார். அவரது கருத்தை நமது அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.

முன்னதாக "மூத்த குடிமக்களின் குரல்' என்ற கையேட்டை அறிமுகப்படுத்தி, "மகிழ்ச்சியான நாள்கள்' என்ற வலைதளத்தைத் ஆளுநர் ரோசய்யா தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் மருத்துவ நிபுணர் டி.எஸ்.கனகா (82) உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த விழாவில் மூத்த குடிமக்களுக்கான அமைப்பின் தலைவர் எம்.சிங்கராஜா, பொதுச் செயலர் எஸ்.ஜெயக்குமார், எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தலைவர் வி.எம்.முரளிதரன், செயலர் கே.மணிமேகலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...