இந்தியப் பொருளாதாரத்தைப் புரிந்து கொண்டவர் மகாத்மா காந்தி மட்டுமே

இந்தியப் பொருளாதாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை உண்மையிலேயே புரிந்து கொண்டவர் மகாத்மா காந்தி மட்டும்தான் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி கூறினார்.


சென்னை வழக்குரைஞர்கள் சங்கத்தின் 150-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, உயர் நீதிமன்றத்தில் தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இதில், புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் "இந்தியப் பொருளாதாரம்- இந்தியாவின் உத்வேகம்-மேலைநாட்டு உத்திகள்' என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி பேசியது:

பொருளாதார விதிகள் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்று பல்கலைக்கழகங்கள், வணிகப் பள்ளிகள் கூறி வருகின்றன. இது முற்றிலும் தவறானது.

60 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த உண்மையை இந்தியா புரிந்து கொண்டது.

மார்க்ஸியவாதிகளும், தடையற்ற சந்தையை முன்வைப்பவர்களும் இணைந்து மனிதர்களை ஒரு பொருளாதார உயிரினமாக மட்டுமே கருதுகின்றனர். அவர்களின் பின்புலமாக உள்ள கடவுள், கலாசாரம், குடும்பம் போன்றவற்றை ஏற்க மறுக்கின்றனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், இந்திய அமெரிக்க பொருளாதார நிபுணர் ஜெகதீஷ் போன்றோரை ஆலோசகராக வைத்திருந்தார். இவர், 72 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையைத் தயாரித்தார். அதில், முதல் மூன்று பக்கங்களில் இந்தியக் குடும்பங்கள்- அவற்றின் பொருளாதார பழக்கங்கள் பற்றி மட்டுமே குறிப்புகள் இருந்தன.

மேலும், 88 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தியர்களின் சேமிப்பிலிருந்து மட்டுமே வந்தது என்பதைக் கண்டறிந்தார். எனவே, இந்தியர்களை அதிகமாகச் செலவு செய்யவும், குறைவாகச் சேமிக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

ஆனால், இதற்கு முரணாக, இந்திய தனி நபரின் சேமிப்பு அளவு அதிகமாகவும், நுகர்வு குறைவாகவும் தொடர்ந்தது. இந்த சேமிப்பு, முதலீடுகள் மூலம் இந்தியாவின் மொத்த வளர்ச்சி 9.5 சதவீதமாக உயர்ந்தது.

சேமிப்புப் பழக்கம் அதிகமாக உள்ள இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, கடந்த 1980-களில் அமெரிக்காவின் சேமிப்பு அளவு 24 சதவீதமாக இருந்தது. இந்த சமயத்தில்தான் கடன் அட்டைகள் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டன. இன்று 31 கோடி மக்கள் தொகை உள்ள அமெரிக்காவில் 120 கோடி கடன் அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்கா தனது உள்நாட்டு உற்பத்தியைவிட, சமூக பாதுகாப்புக்கே பல மடங்கு அதிகமாகச் செலவிடுகிறது. இதன் மூலம், அமெரிக்க பொருளாதாரம் கடன் பெற்று மட்டுமே இயங்குகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

குடும்பம் சார்ந்த சமூகமே சேமிக்கும். தனி மனித சமூகம் அல்ல. மேலை நாட்டு பொருளாதாரத்தைப் போன்று இந்தியப் பொருளாதாரம் பன்னாட்டு நிறுவனங்களால் இயக்கப்படுவதில்லை.

இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மக்கள் கட்டுமானத் துறையில் பணியாற்றுகின்றனர். ஆனால், இந்தத் துறையில் வெறும் நான்கு சதவீதம் மட்டுமே முதலீடு செய்யப்படுகின்றன.

காந்தியடிகள் மட்டுமே மேலை நாட்டு கலாசாரம் இந்தியாவுக்குப் பொருந்தாது என்பதை அறிந்திருந்தார். அதே போன்று மேலை நாட்டுப் பொருளாதாரமும் இந்தியாவுக்குப் பொருந்தாது என்றார் அவர்.

நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன், சென்னை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் கே.ஆர்.தமிழ்மணி, செயலாளர் வி.ஆர்.கமலநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...