சுப்ரீம் கோர்ட்டு முதல் குற்றவியல் கோர்ட்டு வரை ஏராளமான வழக்குகள் நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கின்றன.
மக்கள் நீதிமன்றம்
நிலுவையில் உள்ள இந்த வழக்குகளை விரைவாக விசாரித்து பைசல் செய்ய, தேசிய சட்டப்பணி ஆணைக்குழு ஆண்டுக்கு இருமுறை தேசிய அளவில் ‘மெகா லோக் அதாலத்’ என்ற மக்கள் நீதிமன்றத்தை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் தேசிய அளவில் லோக் அதாலத் நடத்தப்பட்டது. இந்த நிலையில், நேற்று நடந்த இந்த தேசிய லோக் அதாலத்தை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியும், தேசிய சட்டப்பணி ஆணைக்குழுவின் தலைவருமான நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தொடங்கிவைத்தார்.
அவர், டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இருந்தபடி நேற்று காலை 10 மணி அளவில் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் நாடு முழுவதும் லோக் அதாலத்தை தொடங்கிவைத்தார்.
சென்னை ஐகோர்ட்டு
சென்னை ஐகோர்ட்டில் நடந்த லோக் அதாலத் தொடக்க விழாவில், தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக் குழு தலைவர் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, மூத்த நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், ஆர்.சுதாகர், சி.டி.செல்வம், என்.கிருபாகரன், டி.எஸ்.சிவஞானம், எஸ்.மணிகுமார், ஆர்.மாலா, ரவிசந்திரபாபு, கே.பி.கே.வாசுகி, ஆர்.மகாதேவன், கல்யாணசுந்தரம், எஸ்.வைத்தியநாதன், தலைமை பதிவாளர் பொன்.கலையரசன், தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலாளர் ஆர்.எம்.டி.டீக்காராமன் உள்பட நீதிபதிகள், வக்கீல்கள், பொதுமக்கள் என்று ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பின்னர், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.சுதாகர் உள்பட 12 நீதிபதிகள் தலைமையில் 12 சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டன. இந்த அமர்வில் தலா ஒரு வக்கீல், ஒரு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றனர். ஒவ்வொரு அமர்வும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்து ‘பைசல்’ செய்தது.
ரூ.2லு கோடி
இதேபோல, சென்னை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு நடத்திய லோக் அதாலத்தில் 30-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் தலைமையில் சிறப்பு அமர்வுகள் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
ஐகோர்ட்டில் நீதிபதி ஆர்.சுதாகர் தலைமையிலான சிறப்பு அமர்வு இந்தியன் வங்கிக்கும், புவனேஸ்வரி என்ற பெண்ணுக்கும் இடையேயான கடன் தொடர்பான வழக்கை விசாரித்தது. இதில், வங்கிக்கு ரூ.2லு கோடியை புவனேஸ்வரி வழங்க வேண்டும் என்று சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து, உடனடியாக அதற்காக காசோலைகள் தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் முன்னிலையில் வழங்கப்பட்டன.
காசோலை
ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மாலா தலைமையிலான சிறப்பு அமர்வு, வாகன விபத்தில் பலியானவரின் மனைவி ரஞ்சிதம் என்பவருக்கும், வாகனம் காப்பீடு செய்திருந்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கும் இடையே உள்ள வழக்கை விசாரித்தது.
அப்போது, பலியானவரின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் முடிவு செய்ததை தொடர்ந்து, இந்த வழக்கில் சமரசம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கிய காசோலையை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ரஞ்சிதத்திடம் வழங்கினார்.
300 அமர்வுகள்
நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட அமர்வில், விபத்து வழக்கில் பொன்மலர் லட்சுமி (வயது 38) என்ற பெண்ணுக்கு ரூ.90 லட்சம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் சம்மதித்தது. இதையடுத்து, உடனடியாக அந்த பெண்ணுக்கு காசோலை வழங்கப்பட்டது.
இதுபோல் தமிழகம் முழுவதும் 300 நீதிபதிகள் தலைமையில் சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டு பல லட்சம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, சமரசம் செய்து வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ஆர்.எம்.டி. டீக்காராமன், நிருபர்களிடம் கூறியதாவது:-
15 லட்சம் வழக்குகள்
தமிழகம் முழுவதும், நேற்று மாலை 6 மணி நிலவரப்படி ஒரே நாளில் 14 லட்சத்து 93 ஆயிரத்து 964 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.1,390 கோடி வழங்கப்பட்டு உள்ளது. லோக் அதாலத் நடந்த அனைத்து கோர்ட்டுகளில் இருந்து முழு விவரம் வந்தபின், தீர்வு காணப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் ‘பைசல்’ ஆன தொகை சற்று அதிகரிக்கலாம்.
ஆனால், இதுவரை 2 முறை தேசிய அளவில் ஒரே நாளில் லோக் அதாலத் நடந்து உள்ளது. 2013-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி நடந்த தேசிய லோக் அதாலத்தில், தமிழகத்தில் 13 லட்சத்து 77 ஆயிரத்து 252 வழக்குகளில் ரூ.1,140 கோடி ‘பைசல்’ செய்யப்பட்டு, நாட்டிலேயே அதிக வழக்கு களை ‘பைசல்’ செய்தது தமிழகம் என்ற பெயரை பெற்றோம்.
இதன்பின்னர், கடந்த ஏப்ரல் 12-ந் தேதி நடந்த தேசிய லோக் அதாலத்தில், 15 லட்சத்து 8 ஆயிரத்து 767 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.940 கோடி ‘பைசல்’ செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
