செய்திகள் வாடிக்கையாளரிடம் இருந்து நகைகளுக்கு சேதாரம் வசூலிப்பதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி


தங்கநகைகள் வாங்கும்போது சேதாரம் என்று கூறி வாடிக்கையாளரிடம் பணம் வசூலிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எம்.பழனிமுத்து என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

சேதாரம் வசூலிப்பு


தங்க நகைகள் வாங்கும்போது சேதாரம் மற்றும் செய் கூலியை வாடிக்கையாளரிடம் இருந்து தங்கநகை கடை அதிபர்கள், எந்த ஒரு சட்ட அங்கீகாரமுமின்றி வசூலிக்கின்றனர். தங்க நகை செய்யும்போது, சேதாரம் ஏற்பட்டால், அந்த சேதாரத் தங்கத்தை வாடிக்கையாளரிடம் கொடுத்துவிடவேண்டும். ஆனால், நகைக்கடை அதிபர்கள் அந்த சேதாரத் தங்கத்தை அவர்களே வைத்துக்கொள்கின்றனர். மேலும், இந்த சேதாரம் என்று கூறி, வாங்கும் தங்கநகையின் மதிப்பில், 10 முதல் 30 சதவீதம் வரை தங்கள் விருப்பம்போல், வாடிக்கையாளர்களிடம் பணத்தை வசூலிக்கின்றனர்.

அதேபோல, வெள்ளியில் ஆபரணங்கள் செய்யும் அதில், 60 முதல் 70 சதவீதம்தான் வெள்ளி இருக்கும். ஆனால், 92.5 சதவீதம் வெள்ளி என்று குறிப்பிட்டு வாடிக்கையாளர்களிடம் பணத்தை வசூலிக்கின்றனர்.

முறைப்படுத்த வேண்டும்

மேலும், தங்கநகைகள் வாங்கும்போது, உத்தேச ரசீதுகளைத்தான் கொடுக்கின்றனர். அசல் ரசீதை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டியது நகைக்கடைக்காரர்களின் கடமை. ஆனால், அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. அசல் ரசீதை வாடிக்கையாளர்கள் கேட்கும்போது, பல்வேறு வரிகள் எல்லாம் விதிக்கப்படும் என்று கடைக்காரர்கள் எச்சரிக்கை செய்வதால், உத்தேச ரசீதுகளையே வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்கின்றனர். இதனால் அரசுக்கு வரவேண்டிய வருவாய், நகைக்கடைக்காரர்களால் தடைப்படுகிறது.

எனவே தங்கநகைகள் மீதான சேதாரத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிப்பது சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும். தங்கநகை வியாபாரத்தை விதிமுறைகளுடன் முறைப்படுத்த வேண்டும் என்று மத்திய நுகர்வோர் நலத்துறை செயலாளர், இந்திய தரச்சான்று இயக்குனர் ஜெனரல், தமிழக வணிகவரித்துறை செயலாளர் ஆகியோருக்கு கடந்த நவம்பர் 25-ந்தேதி மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

அத்தியாவசியம் இல்லை

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் பழனிமுத்து ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் தங்கம், வெள்ளி வியாபாரத்தில் விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் நகைகள் செய்யும்போது ஏற்படும் சேதாரத்தை வாடிக்கையாளரிடமே கொடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்து இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். எங்களது கருத்தின்படி, தங்கநகைகள் என்பது ஒரு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள் இல்லை. தங்கநகைகளை வாங்கியே தீரவேண்டும் என்று பொதுமக்கள் யாரையும், யாரும் கட்டாயப்படுத்துவதும் இல்லை.

அரசின் கடமை

மேலும், தங்கநகை வியாபாரம் தொடர்பான நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்துவது அரசின் கடமையாகும். மேலும், மனுதாரர் 25-ந்தேதி கோரிக்கை மனுவை மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பிவைத்துவிட்டு, அந்த மனுவை பரிசீலிக்க அதிகாரிகளுக்கு காலஅவகாசம் வழங்காமல், இந்த வழக்கை 6 நாட்களில் தாக்கல் செய்துள்ளார். மேலும், தங்கநகை கடைகள், சேதாரம் தொடர்பாக மக்களை திசைத்திருப்பும் விளம்பரங்களை வெளியிடுகிறார்கள் என்றால், அதை தடுக்க தகுந்த அமைப்பிடம் மனுதாரர் முறையிடலாம். அதற்காக பொதுநல மனுவாக இந்த கோர்ட்டில் வழக்கை தாக்கல் செய்யமுடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...