தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் பள்ளி பாடப் புத்தகங்களின் விலை
உயர்த்தப்பட உள்ளது. பல புத்தகங்களின் விலை 2 முதல் 4 மடங்கு வரை
அதிகரிக்கப்பட்டுள்ளது.
காகித விலை உயர்வு, அச்சடிப்பு மற்றும் விற்பனை, நிர்வாகச் செலவினங்கள்
காரணமாக வரும் கல்வி ஆண்டில் (2015-16) பள்ளிப் பாடப்புத்தகங்களின் விலை
உயர்த்தப்பட இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் டி.சபீதா
அறிவித்துள்ளார்.
அதன்படி, ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலான முப்பருவ பாடப்புத்தகங்கள்
மற்றும் எஸ்எஸ்எல்சி, பிளஸ் ஒன், பிளஸ் டூ பாடப்புத்தகங்களின் விலை கணிசமாக
உயர்ந்துள்ளது. பிளஸ் டூ மனையியல் புத்தகத்தின் விலை 4 மடங்கு
அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, பிளஸ் ஒன் தமிழ் பாடப்புத்தகம் ரூ.12.50-ல் இருந்து ரூ.30 ஆகவும்,
வரலாறு புத்தகம் ரூ.23-ல் இருந்து ரூ.50 ஆகவும், கணினி அறிவியல் தொகுதி-2
ரூ.30-லிருந்து ரூ.70 ஆகவும் உயர்ந்துள்ளது.
பிளஸ் டூ ஆங்கில புத்தகம் ரூ.28-லிருந்து ரூ.60 ஆகவும், கணக்கு புத்தகம்
(தொகுதி 1, தொகுதி-2) ரூ.27-லிருந்து ரூ.80 ஆகவும், தாவரவியல் புத்தகம்
ரூ.27-லிருந்து ரூ.70 ஆகவும், விலங்கியல் புத்தகம் ரூ.24-லிருந்து ரூ.90
ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.