நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதிகள் மாணவர்களிடம் குறைவு

தனியார் நிறுவனங்களில் பணியாற்றத் தேவையான தகுதிகள் மாணவர்களிடம் குறைவாக உள்ளதாக, பணியாளர் தேர்வு பகுப்பாய்வுக் குழுவின் (ஆர்.ஏ.சி.) நிறுவனர் எஸ்.அமர்பிரசாத் ரெட்டி கூறினார்.

 பணியாளர் தேர்வு பகுப்பாய்வுக் குழு (ஆர்.ஏ.சி.) என்ற அமைப்பின் சார்பில்
"தேசிய பணியாளர் தேர்வுத் திட்டம் 2016' தொடக்க விழா, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.அமர்பிரசாத் ரெட்டி பேசியதாவது:

 தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள் தயாரிக்கும் திட்ட அறிக்கைகள் (புராஜக்ட்) தரமானதாக இல்லை. மதிப்பெண் பெறும் நோக்கத்தில் மட்டுமே அவை தயாரிக்கப்படுகின்றன.

 "தங்களிடம் படித்தால் 100 சதவீத வேலைவாய்ப்பு உறுதி' என்று கூறும் கல்லூரிகளில் படித்த மாணவர்கள் பலர் வேலை இல்லாமல் அவதிப்படுகின்றனர். இந்தப் பிரச்னைக்கு கல்வி நிறுவனங்கள், மாணவர்கள், பெற்றோர் என அனைத்துத் தரப்பினரும் பொறுப்பேற்க வேண்டும்.

 பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வேலைவாய்ப்புத் தருவதில்லை.

 மாறாக மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தொழில்நுட்பக் கருவிகளை கையாளும் முறைகள், ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுதல் உள்ளிட்ட தகுதிகளை மாணவர்களிடம் எதிர்பார்க்கின்றன. அத்தகைய  தகுதிகள் நமது மாணவர்களிடம் மிகவும் குறைவாகவே உள்ளதாக நிறுவன நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

 இதனால்தான் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெற நமது மாணவர்கள் போராடுகிறார்கள். எனவே இத்தகைய தகுதிகளை மாணவர்களுக்கு முறையாகப் பயிற்றுவிப்பது அனைத்து கல்லூரிகளின் தலையாய பொறுப்பாகும்.

 மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேசிய பணியாளர் தேர்வுத் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

 வரும் ஜூலை 31, ஆகஸ்ட் 1 ஆகிய இருநாள்களில், சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பணித்தேர்வுத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் 180 முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள், 2,800 கல்லூரிகளைச் சேர்ந்த வேலை வாய்ப்பு அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

 அந்தக் கூட்டத்தில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்தியாவில் எந்தெந்தத் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன, அவற்றுக்கு மாணவர்களை எவ்வாறு தயார்படுத்துவது என்பது குறித்து செயல்திட்டம் வகுக்கப்படும் என்றார் அவர்.

 முன்னதாக "தேசிய பணியாளர் தேர்வுத் திட்டத்தை நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் தொடக்கிவைத்துப் பேசுகையில், மாணவர்கள் செயல்முறைத் தேர்வுகளில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், வளாகத் தேர்வு, அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற திட்டமிட்டு உழைக்க வேண்டும் என்றார்.

 இந்த நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கூடுதல் பதிவாளர் எஸ்.செல்லதுரை, இந்திய சரக்குப் போக்குவரத்து கல்வி மையத்தின் நிறுவனர் வி.ஜெ.புஷ்பகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...