தன்னம்பிக்கை இல்லாதோர் மனம் வருந்தத் தேவையில்லை.

தன்னம்பிக்கை இல்லாதோர் குணங்கள்
பிறருடன் பழகும்போது கூச்சம், புதிய முயற்சிகளில் பயம், படபடப்பு, தனிமையை நாடுதல், தாழ்வு மனப்பான்மை, அடிக்கடி கவலைப்படுதல், தேர்வுகள், போட்டிகளைத் தவிர்த்தல் போன்றவை, தன்னம்பிக்கை இல்லாதோர்
வெளிப்படுத்தும் பொதுவான குணங்களாகும்.
தன்னம்பிக்கை இல்லாதோர் மனம் வருந்தத் தேவையில்லை. ஏனெனில், அவர்களால் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளமுடியும். ’தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது எப்படி’ என்பதை இங்கே காண்போம்.



சுயமதிப்பீடு



பெரும்பாலோர், தெளிவாக தன்னைப்பற்றிய மதிப்பீடு செய்வதில்லை. அப்படி மதிப்பீடு செய்யும்போது, தன் குறைகள் மலை அளவும், தன் நிறைகள் மடு அளவும் இருப்பதாக உணர்ந்தால், அவர்களது சுய பிம்பம் மற்றும் சுய கௌரவம் தாழ்ந்துதான் இருக்கும்.



ஆழ்மன அச்சங்களாலும், எதிர்மறை எண்ணங்களாலும் பாதிக்கப்பட்டு, தம்மைப்பற்றிய தாழ்வான அபிப்பிராயம் கொள்வதால், அவர்கள் தம் சிந்தனை, சொல், செயலில், தன்னம்பிக்கை இன்றி, தாம் செய்யக்கூடிய அளவைக்காட்டிலும், மிகக்குறைவாகவே செயாற்றுவர். மேலும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அல்லது துறையில், ஒருவருக்கு போதுமான அறிவு, பயிற்சி, அனுபவம் அல்லது அங்கீகாரம் இல்லாத சூழ்நிலைகளும், அவரது தன்னம்பிக்கையைக் குலைத்து விடும்.



தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்ளும் வழிகள்:



* உன்னைப் பற்றி சரியாக  சுய ஆய்வு செய்து கொள். உனது நிறைகள், குறைகளைப் பற்றியும், உன்னைச் சுற்றிலும் உள்ள வாய்ப்புகள், தடைகளைப் பற்றியும், தெளிவாகத்  தெரிந்து வைத்துக்கொள்.



* தெளிவான சுய ஆய்வின் அடிப்படையில், உன் குறிக்கோளை நிர்ணயம் செய். உதாரணமாக, கணிதம் உன் பலமென்றால் பொறியியலிலும், உயிரியல் உன் பலமென்றால் மருத்துவத்திலும், மொழியறிவு உன் பலமென்றால் ஊடகம், எழுத்துத் துறையிலும் சாதனை செய்வதை, லட்சியமாகக் கொள்ளலாம்!



* உன் வாழ்க்கைக் குறிக்கோள்களை, நெடுங்கால குறிக்கோள், மத்திய கால குறிக்கோள், குறுகிய கால குறிக்கோள் என்றும், குறுகிய கால குறிக்கோள்களை மாதக் குறிக்கோள், வாரக் குறிக்கோள், தினசரிக் குறிக்கோள் என்றும் பிரித்துக்கொள். இவ்வாறு பிரிப்பதால், பெரிய,கடினமான குறிக்கோள்கள்கூட எளிதில் அடையக்கூடியவையாக, உதாரணமாக, கடினமான பாடங்கள்கூட, எளிதில் படிக்கக்கூடியதாக  மாறிவிடும்.



* தினமும் நிறைவேற்றவேண்டிய குறிக்கோள்களில், அல்லது படிக்கவேண்டிய பாடங்களில், கடினமானவற்றை அல்லது விருப்பம் இல்லாதவற்றை, முதலில் முடிக்க, முழுமூச்சுடன் ஈடுபடு.



* குறிக்கோளை அடையத் தேவையான அறிவு, திறன், மனப்பான்மை மற்றும் பழக்கம் அனைத்தையும் வளர்த்துக்கொள்.



* தினமும், மனதில் ஆக்க சக்தியைத் தூண்டும் இறைவனை வேண்டி, காலைப் பணிகளைத் தொடங்கு.



* நீயே உன் சிறந்த நண்பன். தினமும் காலை எழுந்தவுடன் கண்ணாடி முன் நின்று ’காலை வணக்கம். இன்று இனிய நாள். நீ இன்று சாதிப்பாய்’ என உனக்கு மனதார வாழ்த்து தெரிவித்துக்கொள்.



* உன் பிம்பத்ததை கண்ணாடியில் கண்டால், உனக்கே பிடிக்கும்படியாக, சுத்தமான, நேர்த்தியாக உடையணிந்து, மிடுக்கான, உற்சாகமான தோற்றத்துடன் இரு.



* உன் கடந்த கால சாதனைகளையும், வெற்றிகளையும், சிறியதாக இருந்தாலும்கூட பட்டியலிட்டு, வென்ற அங்கீகாரங்களை அடிக்கடி பார்த்து, உன்னைப் பாரட்டிக்கொள்.



* எல்லோரிடமும் புன்முறுவலையும், ’வணக்கம்’, ’நன்றி’, ’வாழ்க வளமுடன்’ என்ற இனிய வாழ்த்துக்களையும் அடிக்கடி பரிமாறிக்கொள்.



* உன்னைச்சுற்றியுள்ளோர் சாதனை புரியும்போதும், வெற்றி அடையும்போதும், மனமுவந்து அவர்களை பாராட்டு.



* வாய்ப்புக்களுக்காகக் காத்திருக்காமல், சுயபொறுப்பேற்று, நீயே வாய்ப்புக்களைத் தேடிச்சென்று, பற்றிக்கொள்.



* ’எனக்குத்தெரியும், என்னால் முடியும்’ என அடிக்கடி மனப்பூர்வமாக சொல்லிக்கொள். தேர்வுகள், போட்டிகளை எதிர்கொள்ளுவதற்கு முன்னால், இந்த உறுதி மொழி மந்திரமாக வேலை செய்யும்.



* நீ குறிப்பிட்ட சாதனை புரிவதைப்போலவும், நிர்ணயித்த லட்சியத்தை அடைவதைப் போலவும், மனக்கண்ணால் தெளிவாக அடிக்கடி பார்த்துக்கொள். இந்த பகற்கனவு உனக்கும், வெற்றிக்கும் இடையே உள்ள தூரத்தைக் குறைக்கும்.



* வகுப்பறைகளிலும், கூட்டங்களிலும், கருத்தரங்குகளிலும் முன் வரிசைகளில் அமர்ந்து, உற்சாகமாக பங்குகொள். அனைவரிடமும் நன்கு பழக முயற்சி செய்.



* எதிபார்த்தபடி ஒரு காரியம் நிறைவேறாவிடின், அதை தோல்வியாகக்  கருதாமல், கற்றுக்கொடுக்கும் அனுபவ பாடமாக ஏற்றுக்கொண்டால், அதுவே வெற்றிக்கு இட்டுச்செல்லும் பாதையாகி விடும்.



’வெறும் கை என்பது மூடத்தனம், பத்து விரல்களுமே மூலதனம்’ என்ற நேர்முக மனப்பான்மையும், ’வாழ்க்கை வீழ்வதற்கல்ல, வாழ்வதற்கே’ என்ற உறுதி மனப்பான்மையும் இருந்தால், ஒருவன் தன்னம்பிக்கை நிறைந்து, வெற்றியாளனாக ஆவது நிச்சயம்!



மறவாதீர்! பூமியில் இருந்துகொண்டே வானத்தைத் தொட உங்களுக்குள் இருக்கும் கையே  தன்னம்பிக்கை!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...