எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பழைய பிளஸ் 2 மாணவர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயர் நீதின்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

 எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க, சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி முதல் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. வரும் 25-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.
 எதிர்த்து வழக்கு: இந்த நிலையில், சென்னை, நந்தனத்தைச் சேர்ந்த டாக்டர் நல்லி ஆர்.கோபிநாத் உள்பட 60-க்கும் மேற்பட்ட இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர் கபிலன் ஆகியோர் சென்ற ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர்.
 இதேபோல கடந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்கள் சார்பில் பி.அனிதா பிரியா, பி.ஜெமிமா உள்பட பலர் தங்களை எதிர் மனுதாரர்களாக இணைத்துக் கொள்ளவும், தங்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் அனுமதிக்கக் கோரியும் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
 இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட மாட்டாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவாதம் அளித்தது. அதன்படி, கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் யாருக்கும் சேர்க்கைக் கடிதம் வழங்கப்படவில்லை.
 என்ன பாதிப்பு? இந்த நிலையில் மேற்படி வழக்கின் விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் முன்பு திங்கள்கிழமை (ஜூன் 22) மீண்டும் நடைபெற்றது.
 விசாரணையின் போது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் ஆர்.காந்தி, ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ், வழக்குரைஞர்கள் ராகவாச்சாரி, ஐசக் இமானுவேல் உள்ளிட்டோர் ஆஜராகினர். அவர்களின் வாதம்:
 எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு அந்தந்த ஆண்டு பெறும் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை இந்த ஆண்டுக்கான தகுதி மதிப்பெண்ணாகக் கருத முடியாது.
 மேலும், கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு நடத்திய முறையும், இந்த ஆண்டு நடத்திய முறையும் வேறுபட்டுள்ளது. மேலும், வினாத்தாள், விடைத்தாள்கள் மதிப்பிடும் முறை, கட் ஆஃப் மதிப்பெண் போன்றவை அனைத்தும் முற்றிலும் மாறுபட்டுள்ளது. இரண்டையும் ஒன்றாக இணைக்க முடியாது. சமமமில்லாததை சமமாகக் கருத முடியாது என்று அவர்கள் வாதாடினர்.
 அரசுத் தரப்பு விளக்கம்: இதைத் தொடர்ந்து அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி, அரசு கூடுதல் வழக்குரைஞர் கிருஷ்ணகுமார் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தனர்.
 அதில் அளிக்கப்பட்ட விளக்கம்:
 எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு பிளஸ் 2 தேர்வில் பெற்ற தகுதியான மதிப்பெண்கள் இருந்தால் போதும் என சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர, இந்த ஆண்டு மாணவர்கள்தான் மருத்துவப் படிப்புக்கு தகுதி வாய்ந்தவர்கள் என்று கூறப்படவில்லை. யாரெல்லாம் தகுதி வாய்ந்தவர்களோ அவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரலாம்.
 தவிர, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வரும் ஜூலை 3-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது.
 மேலும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 4,679 பழைய பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன; அதில், 1709 இடங்கள் இந்த ஆண்டு பிளஸ் முடித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்; கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த 548 பழைய மாணவர்களுக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 மேலும், எம்.பி.பி.எஸ். விண்ணப்பத் தகவல் குறிப்பேட்டில் உள்ள விதிமுறைகளை ஏற்றுக் கொண்டுதான் மனுதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில், "கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர அனுமதிக்கப்படுவர்; இதில் உள்ள விதிமுறைகளை எதிர்க்க மாட்டோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 தள்ளுபடி செய்ய வேண்டுகோள்: தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டம் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. பல்வேறு கல்வி வாரியங்கள் இருந்தால் மட்டுமே சமன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். அதனால், இங்கு சமன்படுத்தும் நிலை கொண்டுவர வேண்டும் என்பதே தேவையற்றது.
 தவிர, கல்விச் சட்ட விதிமுறைகளை மீறினால் மட்டுமே நீதிமன்றம் அதில் தலையிட முடியும். ஆனால், தமிழக அரசு எந்த விதியையும் மீறவில்லை. எனவே இதுதொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பழைய பிளஸ் 2 மாணவர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள மனுதாரர்களின் வழக்குரைஞர்கள், தங்களது எழுத்துப்பூர்வ வாதங்களை செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும், அவை இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...