பின் இருக்கையில் பயணிப்போரும் தலைக்கவசம் அணிவது அவசியம்'

இரு சக்கர வாகன விபத்துகளில் அதிக அளவில் உயிரை இழக்கும் பின் இருக்கையில் அமரும் பயணிகளுக்கும் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தினர்.

இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களைப் போன்றே அவர்களின் பின் இருக்கைப் பயணிக்கும் தலைக் கவசத்தை கட்டாயமாக்க வேண்டும்.


சாலை விபத்துகளில் சிக்கும்போது ஓட்டுநர்களை விட, பின் இருக்கையில் அமரும் பயணிகள்தான் அதிக அளவில் உயிரை இழக்கின்றனர். பின் இருக்கைப் பயணிகள்தான் அதிக அளவில் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வருகின்றனர் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் அவசர கால மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் டி.வி.ராமகிருஷ்ணன் கூறியது:

இரு சக்கர வாகன ஓட்டிகள் வண்டியின் கைப்பிடியை பிடித்துக் கொண்டு பயணிப்பதால் விபத்துகள் ஏற்படும்போது அவர்களுக்கு ஒரு பிடிப்பு இருக்கும்.

ஆனால் பின் இருக்கைப் பயணிகள், பெரும்பாலும் பெண்கள் ஒருபுறமாக அமர்ந்திருந்து, குழந்தையையும் கையில் வைத்திருப்பார்கள். இதனால் விபத்து ஏற்படும் சமயம் பின் இருக்கைப் பயணிகள் அதிக பாதிப்புக்கு ஆளாகின்றனர். சாலை விபத்துகளை லேசான, மிதமான, கடுமையான விபத்துகள் எனப் பிரிக்கலாம். அவற்றில் லேசான, மிதமான காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களை பெரும்பாலும் காப்பாற்றிவிட முடியும். ஆனால் கடுமையான காயங்களுடன் வருபவர்களை காப்பாற்றுவது சவாலான காரியமாகும் என்று அவர் தெரிவித்தார்.

இது குறித்து ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நரம்பியல் அறுவைச் சிகிச்சைத் துறையின் மூத்த நிபுணர் சுந்தர் கூறியது:

தலைக்கவசம் அணியாத காரணத்தினால் இரு சக்கர வாகன சாலை விபத்து அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் உள்ள இளைஞர் அல்லது ஒரு குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் விபத்துக்கு ஆளாகின்றனர்.

இரு சக்கர வாகனம் விபத்தில் சிக்கும்போது தலையில் மூளைப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக சிலர் சம்பவ இடத்திலேயே பலியாகின்றனர்.

சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டாலும் உணர்வற்ற நிலைக்கு ஆளாகிவிடுகிறார்கள். நபரின் உடலில் உயிர் இருக்கும், கண்களை திறந்து மூடுவார்கள். ஆனால் எந்த உணர்வுமே இல்லாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இது இறந்து போவதைக் காட்டிலும் கொடுமையான விஷயமாகும் என்று அவர் தெரிவித்தார்.

முடி கொட்டுமா?

தலைக்கவசம் அணிவதால் முடி கொட்டுகிறது என்று காரணம் காட்டி பெரும்பாலானோர் அதனைத் தவிர்க்கின்றனர். ஆனால் முடி கொட்டுவதற்கும் தலைக்கவசம் அணிவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தோல் நோய் சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் ரத்னவேல் கூறியது:

முடியின் வேர் தலைக்கு உள்பாகத்தில் இருக்கிறது. வெளியே இருக்கும் முடிக்கு உயிர் கிடையாது. அதனால் தலைக் கவசம் அணிவதால் வெளியில் இருக்கும் முடி கொட்டும் என்று கூறுவது தவறானது.

தலை முடி கொட்டுவதற்கு தைராய்டு போன்ற ஹார்மேன் பிரச்னைகள் அல்லது இரும்புச் சத்து உள்ளிட்ட சத்துகள் குறைபாடே காரணம். இதற்கும் தலைக்கவசத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

தலைக்கவசம் அணிவதால் தலையில் வியர்வை அதிகரித்து, சிறிய கொப்பளங்கள் ஏற்படலாம். தலையில் கைக்குட்டையை போட்டு அதன்மேல் தலைக்கவசம் அணியும்போது வியர்வையை அந்த துணி உள்வாங்கிக் கொள்ளும். எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...