சுயதொழில் துவங்க இதோ வழிமுறைகள் !

ஒரு காலத்தில், தமிழகத்தில் சுயதொழில் துவங்குவதில் பல்வேறு இடர்ப்பாடுகள் இருந்தன. இன்றைய நிலையில், மத்திய, மாநில அரசுகள் அதை எளிமையாக்கி இருக்கின்றன.
சுயதொழில் துவங்க வேண்டுமானால், சில அடிப்படை விஷயங்களை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். எந்த தொழிலை தேர்வு செய்வது?முதலில், ஆர்வம் முக்கியம். மூலப் பொருள், தேவையான இயந்திரங்கள், தொழில்நுட்ப அறிவு, உற்பத்தி பொருட்களை பாதுகாக்கும் வசதி, சந்தைப் போட்டி, தேவையான நிதி இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றில் பெரும்பாலன கிடைக்கும் தொழிலாக தேர்வு செய்தல் நலம்.


அந்த தொழிலில் முன் அனுபவம் உள்ளோரிடம் ஆலோசனை பெற வேண்டும். சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட தொழிலா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
தனி நபராக; இரண்டு அல்லது 20நபர்கள் சேர்ந்து; வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாக என, பல விதங்களில் தொழிலை துவங்கலாம். உரிய ஆலோசனைகளை, மாவட்ட தொழில் மையத்தில் பெற முடியும்.

உதவும் திட்டங்கள்:தொழிலை தேர்வு செய்த பின், அதற்கான பெயர் சூட்டி, மாவட்ட தொழில்துறை இயக்குனரகம் அல்லது, மாவட்ட தொழில் மையத்தில், அதற்கான படிவத்தை நிரப்பிக் கொடுத்து, அனுமதி கடிதம் பெற வேண்டும். இது, சிறு, குறு தொழில்களுக்கான நடைமுறை.
புதிதாகத் தொழில் துவங்குவோருக்கு, 'புதிய தொழில் உரிமையாளர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம்', ௨௦௧௩ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
அதன்படி, தொழில் துவங்க பதிவு செய்தோருக்கு, புதிய தொழிலுக்கான பயிற்சியும், வங்கி அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திடமிருந்து கடனுதவி பெற வழிகாட்டுதலும் கிடைக்கும். தொழிலின் திட்ட மதிப்பீடு, 25 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், மூலதன மானியமாக 25 சதவிகிதமும், 3 சதவீத வட்டி மானியமும், ஆண்டுக்கு, ௧,௦௦௦ புதிய தொழில் முனைவோருக்கு, அரசு வழங்குகிறது.

பதிவு செய்வது எப்படி?
தொழிலை பதிவு செய்ய, திட்ட விவரம், கல்வி தகுதி, வயது, ஜாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் தேவை. திட்ட விவரத்தில், நிதி செலவுகள் விரிவாக இருக்க வேண்டும். அனுபவ சான்றிதழ் இருந்தால் சிறப்பு. மாவட்ட தொழில் மையத்தில் நேரடியாகவோ இணையதளம் மூலமோ பதிவு செய்யலாம்.
திட்ட விவரத்தில், தொழில் பற்றிய முழு விவரம் இருக்க வேண்டும். அதாவது, உரிமையாளர் பற்றிய தகவல்கள், திறமை, அனுபவம், முதலீடு (நீண்ட காலம் மற்றும் குறுகிய காலம்), - உரிமையாளர் செய்யும் முதலீட்டு தொகை, கடனாகப் பெறும் நிதி, தயாரிக்கும் பொருள் பற்றிய விவரம், பட்டியல், செய்முறை, தொழில்நுட்பம், சந்தை நிலவரம், சந்தைப் போட்டி, விற்பனை அளவு, லாப நிலை, எதிர்கால விரிவாக்கம் உள்ளிட்டவை, திட்ட
அறிக்கையில் இருக்க வேண்டும். உற்பத்தி செய்யும் பொருளுக்கான விற்பனை ஆணை (Sales Orders ) முதலிலேயே கிடைத்தால், பயன் உள்ளதாக இருக்கும்.

நிதி திரட்டுவது எப்படி?
புதிய தொழில் முனைவோருக்கு அரசு மற்றும் தனியார் வங்கிகள், சிறுதொழில் வளர்ச்சிக் குழுமம், மாநில நிதியுதவிக் குழுமம் ஆகியவை கடனுதவி வழங்குகின்றன.
மொத்த நிதித் தேவையில், 20 முதல் 25 சதவீதத்தை, உரிமையாளர் செலுத்த வேண்டும். தொழிலுக்கு ஏற்றவாறு வங்கி வரையறுத்த ஒரு குறிப்பிட்ட கடன் தொகை வரை பிணை தேவையில்லை.
வங்கியில், விண்ணப்பத்துடன், தொழில் திட்ட அறிக்கை மற்றும் தொழில் பதிவு விவரம், தொழில் துவங்குவோர் பற்றிய விவரம், மூன்று புகைப்படங்கள், ஐந்தாண்டு வரவு, செலவு, லாப கணக்கு- எதிர்பார்ப்பு, விற்பனை எதிர்பார்ப்பு பட்டியல், நிதி உதவி தேவை பற்றிய விவரம், வங்கி அட்டவணைப்படி பிற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
வங்கி இவற்றைப் பரிசீலித்து கடன் வழங்கும். பெற்ற கடனை காலத்தில் செலுத்தினால், தொழில் விரிவடையும்போது கடனும் தற்கேற்ப பெற்று பயனுறலாம்; வளரலாம்.

அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின்
- குறள் 483

தக்க கருவிகளோடு ஏற்ற காலத்தையும் அறிந்து செய்வராயின் அவரால் முடிக்கக முடியாத செயல்கள் எவையும் உண்டோ? என்று திருவள்ளுவர் கூறுகிறார். பதிலையும் உணர்த்தியுள்ளார்.
முயன்றால் முடியாதது இல்லை. இன்று உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி, புதிய தொழில் துவங்கி வாழ்க்கையில் முன்னேறலாம்.- விஜயகிருஷ்ணன் -

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...