சமையல் காஸ் மானியம் விட்டுக் கொடுத்தோர்1 கோடி பேர் ,பிரதமர் மோடியின் கோரிக்கைக்கு நல்ல வரவேற்பு -8000 கோடி மிச்சம்!

சமையல் காஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத் தொகை, தங்களுக்கு தேவையில்லை' என, ஒரு கோடிக்கும் அதிகமானோர் விட்டுக் கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி விடுத்த கோரிக்கையை ஏற்று, இவர்கள், தானாக முன்வந்து கொடுத்துள்ளதாக, பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.


சமையல் காஸ் சிலிண்டரை, மத்திய அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது. சிலிண்டர் விலையில், மானியத் தொகையை கழித்து, வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர்கள், வினியோகம் செய்யப்பட்டு வந்தன. இதில், பல மோசடிகள் நடப்பதாக புகார்கள் வந்தன. மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்கள், கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில், 2014ம் ஆண்டு, மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்றது. காஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத் தொகையை, வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில், நேரடியாக செலுத்த முடிவு செய்தது.

மத்திய அரசு பிரசாரம்: 'காஸ் சிலிண்டரை, வாடிக்கையாளர்கள், சந்தை விலையில் வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்கான, மானியத் தொகை, அவர்களது வங்கி கணக்கில், செலுத்தப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது.

வாடிக்கையாளர்கள், தங்களது வங்கிக் கணக்கு விவரத்தை, சம்பந்தப்பட்ட, காஸ் சிலிண்டர் ஏஜன்சியிடம் தெரிவிக்குமாறு கூறப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு, ஜனவரி முதல், வாடிக்கையாளர்களுக்கு, சிலிண்டருக்கான மானியத் தொகை, வங்கிக் கணக்கில் செலுத்தப் பட்டு வருகிறது.

வசதிபடைத்தோர் மானியத் தொகையை விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற பிரசாரத்தை, மத்திய அரசு, கடந்த ஆண்டு, மார்ச் 27ல் துவங்கியது. பிரதமர் மோடி, ஒவ்வொரு
மாதமும், கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று, வானொலியில், 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி மூலம், நாட்டு மக்களிடம் பேசி வருகிறார்.

கடந்த ஆண்டு, மார்ச் மாதம், மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், ''வசதி படைத்தவர்கள், காஸ் சிலிண்டருக்கு, மானியம் பெறுவதை விட்டுக் கொடுக்க வேண்டும். இது, பல ஏழைகளின் வீடுகளில், அடுப்பு எரிய உதவும். இதன் மூலம், ஏழைகளுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்க முடியும்,''என்றார்.

பல கோடி சேமிப்பு: இதையேற்று, ஒரு கோடி பேர், காஸ் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ள தாக, பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி அவர்கள் மேலும் கூறியதாவது:


நாட்டில், 15.34 கோடி, சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன; மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என, பிரதமர் விடுத்த வேண்டுகோளுக்கு, நல்ல பலன் கிடைத்துள்ளது. ஒரு கோடி பேர், காஸ் மானியத்தை விட்டுக் கொடுத்துஉள்ளனர். இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் சேமிப்பாக கிடைத்துள்ளது.

இவர்கள் விட்டுக் கொடுத்த மானியத்தொகை, கிராமப் புறங்களில், சமையலுக்கு விறகுகளை பயன்படுத்தும், ஏழைகளின் வீடுகளுக்கு, இலவசமாக சமையல் காஸ் இணைப்பு வழங்க பயன்படும். கடந்த நிதிஆண்டில் மட்டும், காஸ் மானியமாக அரசு, 30,000 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரூ.8,000 கோடி திட்டம்: மானியத்தை விட்டு கொடுத்தவர்களால் மிச்சமான தொகை மூலம்,வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஐந்து கோடி குடும்பங்களுக்கு, இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தை, பிரதமர் மோடி, மே 1ல்
தொடங்கி வைக்கிறார்.இந்த திட்டத்தை, உ.பி., மாநிலம் பலியாவில், மே 1லும், குஜராத் மாநிலம், தாஹோட்டில் மே 15லும், பிரதமர் தொடங்கி வைக்கிறார். 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்துக்கு, பிரதம மந்திரிஎரிசக்தி திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள்: வாடிக்கையாளர்களுக்கு, ஆண்டுக்கு மானிய விலையில், 14.2 கிலோ எடையுள்ள 12 காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது; மாறாக, 5 கிலோ எடை கொண்ட 34 சிறிய சிலிண்டர்களாகவும் வாங்கிக் கொள்ளலாம்.டில்லியில், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் விலை, தற்போது, 419.13 ரூபாயாக உள்ளது. 5 கிலோ காஸ் சிலிண்டரின் விலை,

155 ரூபாயாக உள்ளது. சந்தை விலையில், 14.2 கிலோ சிலிண்டரின் விலை, 509.50 ரூபாயாக உள்ளது. சந்தை விலைக்கும், மானிய சிலிண்டரின் விலைக்கும் உள்ள வித்தியாசத்தை மட்டும், வாடிக்கையாளரின் வங்கி கணக்கில், அரசு செலுத்தி வருகிறது.

யாருக்கு ரத்து?: ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு, காஸ் மானியத்தை தானாகவே ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், காஸ் மானியத்தை, வங்கி கணக்கில், செலுத்தும் முறைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, உரம் போன்ற பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தையும், வங்கிக் கணக்கில் செலுத்த, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

5வது இடத்தில் தமிழகம்: சிலிண்டர் மானியத்தை விட்டுக் கொடுத்தோர் பட்டியலில், தமிழகம் 5வது இடத்தில் உள்ளது.டில்லியில் நிருபர்களிடம் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:

சமையல் காஸ் மானியத்தை விட்டு கொடுத்தவர்களின் பட்டியலில், மஹாராஷ்டிரா, முதல் இடத்திலும்; உத்தரப் பிரதேசம், இரண்டாவது இடத்திலும் உள்ளன. மூன்றாவது இடத்தை டில்லியும்; நான்காவது இடத்தை கர்நாடகாவும்; ஐந்தாவது இடத்தை தமிழகமும் பிடித்துள்ளன.

மானியத்தை விட்டுக் கொடுத்தவர்கள் மூல மாக, மத்திய அரசுக்கு கிடைத்த லாப தொகை யில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும், 60 லட்சம் குடும்பங்களுக்கு, இலவசமாக, சமையல் காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...