ரூ.570 கோடி: சிபிஐ விசாரிக்க உத்தரவு...!

கடந்த மே 13ஆம் தேதி திருப்பூர் அருகே உள்ள சோதனைச் சாவடியில் மூன்று கண்டெய்னர்கள் பிடிபட்டன. இதில் சுமார் ரூபாய் 570 கோடி பணம் இருந்தது. தேர்தல் நடக்கவிருந்த இரு நாட்களுக்கு முன்பாக மிகப்பெரும் தொகை பிடிக்கப்பட்டதால் இந்த விவகாரம் இந்திய அளவில் பரபரப்பாக
பேசப்பட்டது. பணம் பிடிக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு பிறகு பாரத ஸ்டேட் வங்கி அந்தப் பணத்துக்கு உரிமை கோரியது. இதன்பிறகு, பணம் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அது வங்கி பணமா என்று சந்தேகம் எழுந்துள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில், பணம் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் மே 14ஆம் தேதி திருப்பூர் சுங்கச்சாவடியில் மூன்று கண்டெய்னர்களை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பிடித்தனர். இந்த கண்டெய்னர்களில் ரூ.570 கோடி பணம் இருந்தது சோதனையில் தெரியவந்தது. இதில் ஒரு கண்டெய்னர் லாரியின் எண் ஒரு இனோவா காருடைய எண்ணாகும். மற்ற இரண்டு கண்டெய்னர் லாரிகளும் வெவ்வேறு பெயர்களுடன் இருந்தாலும் அவற்றின் ஆர்.சி.புத்தகம் ஒரே மாதிரியாக இருக்கிறது. மூன்று லாரிகளும் ஆந்திராவில் பதிவு செய்யப்பட்டவை. இந்நிலையில், இந்தப் பணம் தங்களுடையது என ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில் வருமானவரித் துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. இதை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு வருமானவரித் துறை தெரிவித்தது. மேலும், வருமானவரித் துறை சோதனை நடத்த அனுமதியளிக்க கோரியது. அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தை வருமானவரித் துறை விசாரணை நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமானவரித் துறையிடம் ஒப்படைத்தது தவறு. இந்த கண்டெய்னர்கள் தங்களுடையதுதான் என்று உரிமை கோரி முன் தேதியிட்ட இரண்டு கடிதங்களை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, வருமானவரித் துறையிடம் கொடுத்துள்ளது. அதில் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுடன் பணம் ஆந்திராவுக்கு கொண்டு செல்லப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், ரிசர்வ் வங்கி அது போன்ற மூவ்மெண்ட் கடிதத்தை கொடுக்கவில்லை. பொதுவாக வங்கிகளுக்கு செல்லும் பணம் ரயிலில்தான் கொண்டு செல்லப்படும். ஆனால், இந்த பணம் கண்டெய்னர்களில் எடுத்து செல்லப்பட்டுள்ளது. எனவே, போலியான ஆவணங்கள் மூலம் இந்த ஹவாலா பணம் ஆந்திராவுக்குக் கடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பணம் ஒரு பெரிய அரசியல்புள்ளிக்குச் சொந்தமானது என்றும், அது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கடந்த 30ஆம் தேதி பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவுக்கு கடிதம் அனுப்பினேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விஷயத்தில் பெரிய அரசியல்புள்ளி சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை நீதிபதி ஆர்.சுப்பையா முன் விசாரணைக்கு வந்தது. இளங்கோவன் மனுவின் மீது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜரானார். சிபிஐ சார்பில் வக்கீல் சீனிவாசன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு சிபிஐ இரண்டு வாரங்களில் பதில் தரவேண்டும் என்றும், கண்டெய்னர்களின் தற்போதைய நிலைகுறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். சிபிஐ சார்பில் ஜுன் 29ஆம் தேதி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், "திருப்பூரில் கண்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடி பணம் ஸ்டேட் வங்கியின் உள்ள வங்கிகளுக்கிடையேயான பணப் பரிவர்த்தனைகளில் ஒன்று. இந்த பிரச்னையில் சர்வதேச தலையீடு எதுவும் கிடையாது. சிபிஐ விசாரிக்கும் அளவுக்கு இந்த வழக்கு ஒன்றும் பெரிய குற்றம் தொடர்பானதோ அல்லது மத்திய அரசு ஊழியர்கள் மீதானதோ இல்லை. அரசுக்கு இழப்பை ஏற்படுத்தக்கூடிய வழக்கோ அல்ல. சிபிஐ-யில் தற்போது குறைவான எண்ணிக்கையில்தான் அதிகாரிகளும் உள்ளனர். அப்படியிருந்தும் இண்டர்போலுடன் இணைந்து பல முக்கிய வழக்குகளை விசாரித்து வருகிறோம். எனவே இதில் சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியமில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டு நீதிபதி சுப்பையா தீர்ப்பளித்தார். இதுகுறித்து மனுதாரர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் தொர்புகொண்டு கேட்டதற்கு, “சிபிஐ இந்த வழக்கு முக்கியமானதல்ல என்று வாதம் செய்தது. ஆனால், நீதிபதி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நான் பிரதமர், ரிசர்வ் வங்கி ஆளுநர், உள்துறை அமைச்சகம், வருமான வரித்துறைக்கு கடிதம் எழுதியிருந்தேன். அந்த கடிதங்கள் கிடைத்ததாக அவர்கள் பதில் அளித்திருந்தார்கள். ஆனால், விசாரணை குறித்தோ, நடவடிக்கைகள் குறித்து பதில் சொல்லவில்லை. இந்த பணம் தேர்தல் முறைகேடுகளுக்காக பயன்படுத்தப்பட்டது என்று விசாரணையில் தெரியவந்தால், அதன் பின்னர் இதில் தேர்தல் ஆணையம் சம்பந்தப்படும். நாளேடுகளிலும், ஊடகங்களிலும் வந்த செய்திகளிலும், புகைப்படங்களிலுமே ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அந்த வாகனமே பாதுகாப்பற்ற வாகனம், பணம் ஆக்ஸிஸ் வங்கிக்கு சொந்தமானது உள்ளிட்ட ஆதாரங்கள் வெளியாகியிருக்கின்றன. எங்களிடம் கேட்கும் பட்சத்தில் நாங்களும் உரிய ஆவணங்களை அளிப்போம். மத்திய அரசின் தலையீடு இல்லாமல் முறையான விசாரணை நடக்கும் என நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம்" என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...