பேஸ்புக்கில் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச போட்டோ!

பேஸ்புக்கில் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச போட்டோ!

இளம் பெண் தற்கொலை

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்

          ----     திரு.ஆர்.வரதராஜ்
                   (முன்னாள் காவல்துறை அதிகாரி)
             தலைவர் நே.ப.தி.மு.க. (N.P.T.M.K)

சேலத்தைச் சேர்ந்த பி.எஸ்.சி பட்டதாரியான வினுப்பிரியா என்ற இளம் பெண் தன்னுடைய நிர்வாணப்   படம் பேஸ்புக்கில் வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

மார்பிங் என்றால் என்ன? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பெண்ணின் புகைப்படத் திலுள்ள தலையை அகற்றி அதை இன்னொரு நிர்வாணமான பெண்ணின் உடலில் ஒட்டி விடுவது.

இப்படித்தான் வினுப்பிரியாவின் புகைப்படத்திலுள்ள   தலையை அகற்றி அதை வேறொரு பெண்ணின் நிர்வாண உடலுடன் பொருத்தி அந்தப் படத்தைக் குற்றவாளி பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறான். இந்த முறைக்கு "Morphing" என்று  ஆங்கிலத்தில் பெயர். இந்த "மார்பிங்" வகை குற்றங்கள் உலகம் முழுவதும் மிக அதிக அளவில் நடந்து வருகிறது.

பொதுவாக பேஸ்புக் மூலம் நல்ல நண்பர்கள் மட்டுமே கிடைப்பதுண்டு. ஆனால் வினுப்ரியாவிற்கோ பேஸ்புக் ஒரு எதிரியை அறிமுகப்படுத்திவிட்டது  என்று தான் சொல்ல வேண்டும்.

வினுப்ரியாவின் தற்கொலை மூலம் பெண்கள் பல உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்களின் புகைப்படங்கள் எப்படி குற்றவாளிகளின் கைகளுக்குக் செல்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

1. பெண்களின் புகைப் படங்களை குற்றவாளிகள் அவர்களது பேஸ்புக் பக்கங்களில் பதிவு செய்த அவர்களது புகைப்படத்தை எடுத்து இவ்வாறு "மார்பிங்" செய்கிறார்கள்.

2.பெண்கள் பொது இடங்களில் நடந்து செல்லும் போது குற்றவாளிகள் அவர்களை செல்போன் மூலம் படம் எடுத்து அதை "மார்பிங்" செய்கிறார்கள்.

3.சில பெண்கள் தங்கள் படங்களை தங்கள் மொபைல் போனில் பதிவு செய்து வைத்திருப்பதுண்டு. அவர்கள் மொபைல் போன் தொலைந்து அது குற்றவாளிகள் கையில் கிடைக்கும் போது அந்தப் பெண்களின் படங்களை  "மார்பிங்" செய்து இவ்வாறு ஆபாசப்
படங்களாக வெளியிடுகிறார்கள்.

 பொதுவாக இது போன்ற குற்றங்களில் பெண்களின் வருங்கால  வாழ்க்கையை மனதில் கொண்டு பெண்களும் மற்றும் அவர்களது பெற்றோர்களும் காவல் துறையிடம் புகார் கொடுக்க தயங்குவதுண்டு.

எனவே இது போன்ற தங்களது சித்தரிக்கப்பட்ட ஆபாச படங்கள் பேஸ்புக்கிலோ அல்லது இணைய தளத்திலோ வந்தால் அவற்றை எப்படி அவற்றிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்ற யுக்தியை பெண்களும் மற்றும் பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் தங்களது ஆபாச படத்தை பேஸ்புக்கில் பார்த்தால் உடனடியாக  அந்த படத்தின் மேல் வலது பக்கத்திலுள்ள அம்புக்குறியை  அழுத்தினால் "Report Photo"  என்ற ஒரு option வரும் அதை நீங்கள் கிளிக் செய்துவிட்டால்  72 மணி நேரத்தில் அந்த ஆபாச புகைப்படம் பேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்டு விடும். அதே போல் பேஸ்புக்கிலுள்ள "Help Center"   உபயோகித்து புகார் செய்தால் அந்த ஆபாச படம் நிச்சயம் நீக்கப்பட்டுவிடும்.

ஒரு வேளை பேஸ்புக்கை தவிர வேறு websiteல் உங்கள் ஆபாச புகைப்படம் வந்தால் "Contact us" என்ற option க்கு நீங்கள் புகார் செய்தால் அந்த ஆபாசப் படம் அல்லது விடீயோ உடனே நீக்கப்பட்டுவிடும்.

இந்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காத பட்சத்தில் நீங்கள் காவல்துறைக்கு புகார் அளிக்க வேண்டும்.
பெண்கள் இதுபோன்ற "மார்பிங்" செய்யப்படும் குற்றங்களிருந்து  தங்களைக் காத்துக் கொள்ள கீழ் கண்ட எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

1. பேஸ்புக்கில் Privacy Settings என்று ஒரு வசதி உண்டு. அதை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் உங்களுடைய நெருங்கிய நண்பர்களை தவிர வேறு யாரும் உங்கள் புகைப்படங்களை பார்க்க இயலாது.

2.இணையதளத்தில் உங்கள் புகைப்படத்தை பகிர்வு செய்யும் போது மிகவும் எச்சரிக்கையுடன் பகிர்வு செய்ய வேண்டும். மிகவும் நம்பிக்கையானவர்களிடம் மட்டுமே உங்கள் புகைப் படத்தைப் பகிர வேண்டும்.

 3. பேஸ்புக்கில் பெண்கள் தனியாக இருக்கும் புகைப்படத்தை  பதிவு செய்யக் கூடாது. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவேண்டும். காரணம் இப்படிப்பட்ட புகைப்படத்திலிருந்து "மார்பிங்" செய்வது மிகவும் கடினம்.

4.பொது இடங்களில் யாராவது பெண்களை புகைப்படம் எடுத்தால் அதை தடுத்து நிறுத்துங்கள் காரணம் இந்த புகைப்படங்கள் ஆபாச புகைப்படங்களாக மார்பிங்  செய்யப்படலாம்..

வினுப்ரியாவின் தற்கொலையில் இரண்டு முக்கிய பிரச்சனைகளைப் பற்றிய ஒரு அலசலை . பேஸ்புக் நண்பர்கள் முன்னிலையில் தெரிவிக்க விரும்புகிறேன்.

1.வினுப்ரியாவின் முதல் ஆபாசப்படம் 23ந் தேதி ஜூன் பேஸ்புக்கில்  வெளிவந்தது. உடனே வினுப்ரியா தனது பெற்றோர்களிடம் தெரிவிக்க, அவரது பெற்றோர்கள் காவல் துறையில் புகார் கொடுத்தனர். காவல் துறை அதிகாரிகள் இரண்டு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால் ஒரு சில நிமிடங்களில் பேஸ்புக்கிலுள்ள optionஐ பயன்படுத்தி அந்தப் படத்தை நீக்க வழி இருக்கும் போது காவல் துறை அதிகாரிகள் அதை உடனடியாக செய்யாமல் ஏன் இரண்டு வாரங்கள் கெடு விதித்தனர் என்பது புரியவில்லை.

வினுப்பிரியா தற்கொலை செய்து கொண்ட செய்தி வெளி வந்த ஒரு மணி நேரத்திலேயே வினுப்ரியாவின் ஆபாசப் படங்கள் பேஸ்புக்கிலிருந்து அந்தக் குற்றவாளியால் நீக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் அந்தக் குற்றவாளி வினுப்ரியாவின் நெருங்கிய வட்டாரத்துடன் தொடர்பு கொண்டவன் என்பது உறுதியாகிறது. புகார் வந்தவுடனேயே உரிய விசாரணையை காவல் துறை உடனடியாக மேற் கொண்டிருந்தால் அவனை கைது செய்திருக்கலாம். வினுப்ரியாவின் தற்கொலையையும் காவல்துறை தடுத்திருக்கலாம்.

வினுப்ரியாவின் பெற்றோர்களிடம் சம்பத்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் செல்போன் வாங்கி கொடுக்கும்படி லஞ்சம் கேட்டதாகவும், வினுப்பிரியாவின் தகப்பனார் அந்த செல்போனை லஞ்சமாக வாங்கிக் கொடுத்த பிறகும் காவல் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று வினுப்பிரியாவின் தந்தை கூறியிருக்கிறார்.
ஒரு பெண்ணின் மரணத்திற்கு காரணமான  அந்த  அதிகாரிகளை  அரசாங்கம் உடனடியாக பணி நீக்கம் செய்யவேண்டும். இது போன்ற அதிகாரிகளால் தான் பொதுமக்களுக்கு காவல்துறை மீது இருக்கும் மதிப்பே சீர்குலைந்து போகிறது. எனவே அரசாங்கத்திடமிருந்து உடனடியாக கடுமையான நடவடிக்கையை  நாம் எதிர்பார்க்கிறோம்.

அடுத்து வினுப்ரியா தற்கொலைக்கு முன்பாக தான் எழுதிய கடிதத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.
"என்னுடைய அம்மா, அப்பாவே என்னை நம்பவில்லையென்றால் நான் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம். அவங்களே என்னைப் பத்தி கேவலமா பேசறாங்க. என் போட்டோக்களை நான் யாருக்கும் அனுப்பவில்லை நான் எந்த தப்பும் செய்யவில்லை" என்னை நம்புங்கள்" என்று வினுப்ரியா  தற்கொலை செய்வதற்கு முன்பு இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார்.
எனவே வினுப்பிரியவை அவர்கள் பெற்றோர்களே சந்தேகக் கண்ணுடன் பார்த்திருக்கிறார்கள்.

அவர்களுடைய சந்தேகமே வினுப்பிரியாவின் மரணத்திற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.
எனவே பெண்களின் பெற்றோர்கள் மற்றும் கணவன்மார்களுக்கு வினுப்ரியாவின் மரணம் சொல்லும் செய்தி என்ன தெரியுமா? இந்த கணினி உலகத்தில் போலிகளை உருவாக்குவது மிகவும் எளிது. எனவே ஆபாசப் காட்சிகளில்  பெரும்பாலும் போலியானவையே. இந்த போலி ஆபாச படங்களுக்கு பலியாகும் பெண்களின் பெற்றோர்கள், கணவன்மார்கள் மற்றும் உறவினர்கள் அந்தத் ஆபத்தான கட்டத்தில் அந்த பெண்ணுக்கு உறு துணையாக இருந்து அந்தக் குற்றத்திலிருந்து அந்த பெண்ணை மீட்க முயலவேண்டுமேயொழிய, சந்தேகக் கண்களை அந்தப் பெண் மீது பாய்ச்சி அந்தப் பெண்ணின் உயிரைக் குடிக்க பெற்றோர்களும் மற்றும்சம்பந்தப்பட்டவர்களும்  காரணமாகி விடக் கூடாது என்பதே வினுப்ரியாவின் மரணம் நம் அனைவருக்கும் தெரிவிக்கும் செய்தியாகும்.
வினுப்ரியாவின் மரணத்தைப் பற்றிய

இந்த உரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிர்வு செய்யுங்கள்.

உங்கள் நண்பர்கள் எச்சரிக்கையாக இருக்க நீங்கள் உதவலாமே!

இப்படிக்கு
- திரு . ஆர் . வரதராஜ் (முன்னாள் காவல்துறை அதிகாரி)
  தலைவர்
நே.ப.தி.மு.க. (N.P.T.M.K)
தமிழ்நாட்டு ஊழல் அரசியலுக்கு
எதிரான இயக்கம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...