ஓட்ஸ், உண்மையில் சத்துமிக்க உணவா???

எந்த உணவை தவறவிட்டாலும் காலை உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள் உணவியல் நிபுணர்கள். காலை உணவை சமச்சீரான உணவாக எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்பட பலவிதமான உடலியல் பிரச்னைகள் ஏற்படுவதாக எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். அலுவலகம் செல்லும் அவசரத்தில்
காலை உணவாக கார்ன் ப்ளாக்ஸை பாலில் போட்டு கலந்து குடித்தவர்கள் இப்போது கையில் எடுத்துள்ள உணவு ஓட்ஸ். இரவே ஒரு பெரிய தம்ளர் பாலில் ஓட்ஸை ஊறவைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுகிறார்கள். ஓட்ஸ் ஊட்டச்சத்துகளை அளிக்குமா? அல்லது வெறும் உதாரா? ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா விக்ரத்திடம் கேட்டோம்...

''வெளிநாடுகளில் காலை உணவை சமைக்க சோம்பேறித்தனம் பட்டவர்கள் அதற்கு மாற்றாக சில முறைகளை ஏற்படுத்தினார்கள். அதில் ஒன்றுதான் இந்த ஓட்ஸ் பழக்கம். சாப்பிட எதுவும் இல்லை என்று வேறுவழியின்றி இருப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். மற்றபடி, ஓட்ஸில் நார்ச்சத்து தவிர எதுவுமில்லை என்பதுதான் உண்மை. எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவு ஓட்ஸ். கலோரிகள் குறைவு என்பதால் உடல் பருமனை குறைக்க முயல்பவர்கள் ஓட்ஸை சாப்பிடுகிறார்கள். மாவுச்சத்து ஓட்ஸில் அதிகம் இருப்பதால் தினமும் சாப்பிடக்கூடாது. உடலுக்கு தேவையற்ற பொருளான க்ளுட்டனும் ஓட்ஸில் அதிகம் உள்ளது. வெளிநாடுகளில் க்ளுட்டன் இல்லாத ஓட்ஸ் கிடைக்கிறது. நமது நாட்டில் கிடைப்பதில்லை. க்ளுட்டன் அலர்ஜி உள்ளவர்கள் ஓட்ஸை எடுத்துக் கொள்ளக்கூடாது. உடலில் அதிகமாக சேரும் க்ளுட்டன் கொழுப்பில் சென்று பசைபோல ஒட்டிக்கொள்ளும். இதனால் பருமன் குறையாது. கொழுப்புகளும் கரையாது.

சோம்பல் அதிகமாக உள்ளவர்கள்தான் முந்தைய நாள் இரவே ஓட்ஸை பாலில் கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு காலையில் எடுத்து சாப்பிடுகிறார்கள். இதனால் எந்தப் பயனும் கிடையாது. ஓட்ஸ் உடன் ஸ்ட்ராபெர்ரி, வால்நட், முந்திரிப்பருப்பு என கலந்து சாப்பிடுபவர்களும் உண்டு. இவர்கள் ஓட்ஸ்கூட எடுத்துக்கொள்ளும் மற்ற உணவுகளின் மூலம் புரதம், வைட்டமின் ஆகிய சத்துகள் கிடைத்துவிடுகின்றன. இதனோடு ஓட்ஸில் இருந்து மாவுச்சத்தும், நார்ச்சத்தும் கிடைத்துவிடுவதால் சமச்சீர் உணவாக மாறிவிடுகிறது. அதற்காக பாலும், ஓட்ஸூம் கலந்த கலவையில் சர்க்கரையைப் போட்டு பாயசம்போல சாப்பிட்டால் எந்தப் பயனும் இருக்காது. கலோரிகள் அதிகமுள்ள உணவாகிவிடும். பாலில் கலந்து சாப்பிடுவதற்கு பதிலாக தயிரில் அல்லது மோரில் ஓட்ஸை ஊறவைத்துச் சாப்பிவது அதிகப் பயன்தரும். இதை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கத் தேவையில்லை. குளிர்சாதனப் பெட்டியில் ஓட்ஸை வைத்துச் சாப்பிட்டால் முழுமையான சத்துகள் கிடைக்காது. இரவில் ஊறவைத்து காலையில் ஓட்ஸை சாப்பிட நினைப்பவர்கள் வெறும் தண்ணீரில் எலுமிச்சம்பழத்தை பிழிந்துவிட்டு ஓட்ஸை ஊறவைக்கலாம். வைட்டமின் சத்துகள் அப்படியே கிடைக்கும்.

பழங்கள் மற்றும் பருப்பு வகைகளுடன் ஓட்ஸை சாப்பிடும்போதுதான் அது முழுப் பயனையும் அளிக்கும். ஆனாலும் தினமும் சாப்பிடாமல் ஒருநாள் விட்டு மறுநாள் என்ற கணக்கில் வாரத்துக்கு அதிகபட்சம் மூன்று நாட்கள் சாப்பிடலாம். முன்பெல்லாம் கார்ன் ப்ளாக்ஸை பாலில் போட்டு சாப்பிட்டார்கள். அதில் கார்போஹைட்ரேட் தவிர எதுவுமில்லை. ஆனாலும் நிறைய சத்துகள் இருப்பதாக விளம்பரம் செய்து மக்களை நம்பவைத்தார்கள். இப்போது ஓட்ஸ் புதிய அவதாரம் எடுத்துள்ளது. இதை காலையில் சாப்பிட்டால் எல்லா சத்துகளும் கிடைத்துவிடும் என விளம்பரம் செய்கிறார்கள். கார்ன் ப்ளாக்ஸுடன் ஒப்பிடுகையில் ஓட்ஸில் நார்ச்சத்து இருப்பதால் நல்லது எனலாம். ஆனாலும் ஓட்ஸும் அத்தியாவசிய உணவு கிடையாது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தினமும் இயற்கையான காய்கறிகளை, பழங்களை காலை உணவில் சேர்த்துக்கொள்வதுதான் நீடித்த பயனை உடலுக்கு அளிக்கும். வெளிநாடுகளில் வெறும் பிரட் டோஸ்ட், கொஞ்சம் ஓட்ஸ் மட்டும் எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக இருக்கிறார்களே என சிலர் வாதம்புரிவார்கள். நன்றாக கவனித்துப் பார்த்தால் பிரட் டோஸ்ட், காய்கறிகள் சாலட், கொஞ்சம் பழத்துண்டுகள், ஒரு அவித்த முட்டை. க்ரீன் டீ என அவர்களது காலை உணவு சமச்சீரானதாகவே இருக்கும். சிலர் ஓட்ஸ் சாப்பிடுகிறேன் என்பதை ஒரு பேஷனாகவே சொல்லுகிறார்கள். அது தேவையில்லை. நமது உள்ளூர் காய்கறிகளிலேயே ஊர்ப்பட்ட சத்துகள் அடங்கியிருக்கின்றன. கார்ன் ப்ளாக்ஸ், ஓட்ஸ் பாக்கெட்டுகளை ஒருபுறம் தூக்கி வைத்துவிட்டு காய்கறிகள், கீரைகளை முறையாக சமைத்து சாப்பிட்டாலே நோய்களின்றி ஆரோக்கியமாக வாழ முடியும்'' என்கிறார்

- விஜய் மகேந்திரன்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...