தமிழகத்தில் ஐந்து லட்சம் போலி ரேஷன் கார்டுகள்!

தற்போது, தமிழகத்தில் குடும்ப அட்டையை ஸ்மார்ட் கார்டாக மாற்றுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், ஐந்து லட்சம் போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.



சென்னை எழிலகம் வளாகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டம் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், ஆணையர் மதுமதி மற்றும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் உணவுப்பொருள் வழங்கல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், வருகிற தீபாவளிப் பண்டிகைக்கு மக்களுக்கு உணவுப் பொருட்களை எந்தவிதத் தடையுமின்றி முன்கூட்டியே கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் தமிழகத்தில் இதுவரை 5,12,000 போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நடப்பாண்டு, ஜுன் மாதத்தில் நாடு முழுவதும் 1,60,00,000 போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் மானியத் தொகை சேமிக்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒருபுறம், போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு களையப்பட்டாலும் இன்னும் அதிக மக்கள் ரேஷன் கடைகளில் உள்ள உணவுப் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். ரேஷன் கடைக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் நடந்தது மட்டுமே மிச்சம். ஆனால் உளுந்தம்பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காமல் வெறும் கையோடு திரும்பி வருகின்றனர். குறிப்பாக, வேலைக்குச் செல்லும் பெரும்பாலான மக்கள் ஒவ்வொரு மாதமும் பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அவ்வப்போது அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு வந்தாலும், முறைகேடுகள் ஒரு பக்கம் நடந்துகொண்டேதான் இருக்கிறது.

பெரும்பாலானோர் ரேஷன் கார்டு இல்லாமல் இருப்பது இன்னொரு பிரச்னை. சமீபத்தில், தமிழகத்தில் நான்கு பிரிவுகளில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூறியது. தீபாவளி முதல் புதிய ரேஷன் கார்டுகளை இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, மக்கள் இணையதளம் மூலம் புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...